வியாழன், 2 ஜூலை, 2015

சென்னை மெட்ரோவும் ஹை கோர்ட்டும்



சென்னைக்கு மெட்ரோ  வந்ததன் காரணமாக  சென்னை மக்கள் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் அழகையும் வடிவமைப்பையும் அது செல்லும் வேகத்தையும் பாமர மனிதர்களிலிருந்து பதவியில் உள்ளவர்கள் வரை அத்தனை பேரும் வியந்த வண்ணம் உள்ளனர். இது தொடர்பாக முக நூலிலும் ட்வீட்டரிலும்(தமிழில் என்ன?) இதைப் பற்றியே பேச்சு.இதைப் போலவே சென்னை உயர் நீதி மன்றக் கட்டிடம்  1904 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட பொழுது சென்னை மக்கள் அதன் அழகில் மெய் மறந்து போயிருப்பார்கள் போலிருக்கிறது. அப்பொழுது இப்பொழுது உள்ளது போல ஊடக வசதிகள் இல்லாதக் காரணத்தால் செஞ்சியை சேர்ந்த ஏகாம்பர முதலியார் என்பவர் ஐ கோர்ட்டின் அலங்கார சிந்து என்ற ஒரு கவிதை நூலையே வெளியிட்டிருக்கிறார். 8 பக்கங்களுடைய இந்நூல் லாவணி சிந்து என்று சில கவிதைப் பரிமாணங்களில் எழுதப்பட்டிருக்கிறது. இதனை சென்னை துளசிங்க முதலியார்  அண்டு கம்பெனி என்பவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். அதிலிருந்து ஒருகவிதை

விநாயகர் துதியுடன் ஆரம்பமாகிறது நூல்

அன்னை வயலரந் திருசூழ்ந்து அகிலமெல்லாம் பேறோங்கும்
சென்னை எனும் இன்னகரில் சிறப்புர- உன்னிதமாம்
ஐ கோர்ட்டின் கட்டடத்தை அகிலமிசைப் பாடுதற்கு
கை ஐந்துடைய கணன் காப்பு.

லாவணி
உன்னிதமான சென்னை  ஐ கோர்ட்டை கன்னியே நீ பாறாய்
உற்பனமாகவே அப்புறம் ஓங்கிடும் கற்பனை சீறாய்
சித்தமாகவே மெத்தையடுக்கு மூன்று வைத்து அதை வெகு சீறாய்
சிங்காரமாகவே அங்கங்கே மூலையில் தங்கும் சுழல் படி பாறாய்
இப்படியாக செப்பினால் உனக்கு ஒப்பாதடி மானே
இருக்கும் வினோதங்களை அடுக்காய் உரைத்தால் உனக்கு சேர்க்குமடித் தேனே
மண்டலம் புகழ் நொண்டி சிந்திலே விண்டிடுவேன் கேளாய்
மங்கையே உன் மனம் எங்கும் செல்லாமல் தங்கியே நீ பாறாய்

மீதி கவிதையினை நீங்களே படித்துப் பாருங்கள். தற்பொழுது இப்புத்தகம் Madurai Project தளத்தில் மின் நூலாக கிடைக்கிறது.  ( நன்றி  மதுரை ப்ராஜக்ட்)















செவ்வாய், 30 ஜூன், 2015

தேவை தேர்தல் சீர் திருத்தம்



ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் ஒருவழியாக முடிந்தது எதிர் பார்த்ததுப் போலவே அம்மா அமோக வெற்றிப் பெற்றுவிட்டார். தேவையின்றி ஒரு இடைத் தேர்தல் உருவாக்கப்பட்டு மக்களின் வரிப் பணம் பல கோடி செலவு செய்யப்பட்டு நடத்தப் படும் இம்மாதிரியான இடைத் தேர்தல்கள் தேவையா என்ற என்ணம் எழுகிறது. நம்முடைய தேர்தல் நடை முறைகளில் நிறைய மாற்றங்கள் தேவைப் படுகிறது. 10 பேர் ஒரு தேர்தலில் போட்டியிடும்போது அதில் ஒன்பது பேர் தலா 9% வக்குகள் பெற 10% வாக்குகள் பெறும் கடைசி நபர்  மக்களின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். 90% மக்கள் அவரை எதிர்த்து வாக்களித்திருந்தாலும் அவர்தான் மக்களின் பிரதிநிதி.  இந்த அர்த்த மற்ற முறையை மாற்றி விகிதாச்சாரப் பிரதித்துவ அடிப்படையில் தேர்தல் நடத்தப்படுவதுதான் உண்மையான ஜனநாயகத்திற்கு அழகு.. ஆனால் அந்த மாற்றங்கள் எல்லாம் இந்த நாட்டில் இப்பொழு வரப் போவதில்லை என்பதால் தற்பொழுது நடை முறையில் உள்ள தேர்தல் அமைப்பிலேயே சில மாற்றங்களை கொண்டு வரலாம்.

1) தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர் இரண்டரை ஆண்டுகளுக்குள் இறந்தாலோ அல்லது பதவியைத் துறந்தாலோ இடைதேர்தல் நடத்தப்படலாம். இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டால் அந்தத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்த வேண்டிய அவசியமில்லை.அந்தத் தொகுதிக்கானப் பணிகளை பக்கத்துத் தொகுதி உறுப்பினரின் பொறுப்பில் விடலாம்.(மாவட்ட ஆட்சியர்களே இன்னொரு மாவட்டத்தின் பொறுப்பையும் பார்க்கும் பொழுது இதில் ஒன்றும் தவறில்லை)

2) பதவித் துறப்பு செய்யும் உறுப்பினர்கள் அடுத்தப் பத்தாண்டுகளுக்கு எந்தவொரு தொகுதியிலும் போட்டிப்போட இயலாது என அறிவிக்க வேண்டும்.

3)  வேட்பு மனு தாக்கல் செய்யும் பொழுது கல்விச் சான்றுகளின் அசலையும் இணைத்து அளிக்க வேண்டும். வேட்பு மனு பரீசீலனைக்குப்பிறகு அவற்றைத் திரும்ப அளிக்கலாம். போலியான சான்றுகள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட வேண்டும்.

4) ஒரு வாக்களர் தான் வாக்களிக்கவே இல்லை ஆனால் தனது வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை ஐயத்திற்கு இடமின்றி நிரூபித்துவிட்டால் அந்த வாக்குச் சாவடியில் நடை பெற்ற வாக்குப் பதிவினை செல்லாது என அறிவித்து மறு தேர்தல் நடத்த வேண்டும்.. அச்சாவடியில் பணிபுரிந்த தேர்தல் அலுவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்.

5) சுயேச்சையாகப் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெறும் வேட்பாளரின் வாக்குகளில் ஒரு சதவீதமாவதுப் பெற்றிருக்க வேண்டும். இல்லையென்றால் அதன் பிறகு அவர் எந்த தேர்தலிலும் போட்டியிட இயலாது. (பெரும்பாலும் சுயேச்சைகளை அங்கிகரிக்கப் பட்ட கட்சிகளே பல் வேறு காரணங்களுக்காக நிறுத்துகின்றன.அதில் ஒரு முக்கிய காரணம் சுயேச்சைகளின் பூத் ஏஜண்டுகள் என்ற பெயரில் தங்கள் அடியாட்களை வக்குச்சாவடிக்குள் அதிகப்படுத்துவது.  எனவே சுயேச்சைகளுக்கு பூத் ஏஜண்டுகள் கிடையாது என அறிவிக்க வேண்டும்.

6) தேர்தல் தேதிக்கு ஒரு மாதம் முன்பு மாநிலமாக இருந்தால் கவர்னர் ஆட்சியினையும் நாடாளுமன்றமாக இருந்தால் குடியரசுத்தலைவர் ஆட்சியையும் அமுல் படுத்த வேண்டும்.

இன்னும் இது போல என்ணற்ற சீர் திருத்தங்களை கொண்டு வந்தால் மட்டுமே நேர்மையான ஜன நாயகம் இந்த நாட்டில் சாத்தியம் ஆகும்.

திங்கள், 8 ஜூன், 2015

ஹெல்மெட்டும் ஹை கோர்ட்டும்




அடுத்தமாதம் முதல் தேதியிலிருந்து ஹெல்மெட் அணியாத இரு சக்கர வாகன ஓட்டிகளின் உரிமத்தை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இம்மாதிரியான சட்டங்கள் சட்டத்தை அமுல் படுத்தும் அமைப்பான அரசு முழு மனதோடு செயல்பட்டால் மட்டுமே நிறைவேற்ற இயலும்.இல்லையென்றால் தேவையற்ற லஞ்ச ஊழலுக்கே வழி வகுக்கும்.மேலும் இம்மாதிரியான விஷயங்களில் பிரச்சாரங்கள் மற்றும் தொடர் விளம்பரங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டி அவர்களை நெறி படுத்தலாம்.சட்டமாகும்போது அப்பாவி பொது மக்களில் பலர் குற்றவாளிகளாக ஆக்கப்படுவார்கள். அம்மை நோய்க்கான தடுப்பூசி போலியோவிற்கான சொட்டு மருந்து ஆகியவை விளம்பரங்கள் மூலமே மிகப்பெரும் வெற்றி அடைந்திருக்கிறது என்பதை அனைவரும் அறிவோம். பேரூந்து படிகட்டுகளில் நின்று பயணம் செய்யும் பயணிகளின் உயிர்களுக்கு இதுவரை என்ன உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கிறது? பள்ளி வேன் மற்றும் ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமான மாணவர்களை ஏற்றி சென்று கொண்டிருக்கிறார்களே இவற்றை எல்லாம் தடுக்க சட்டம் இருந்தும் ஏன் அமுல் படுத்த முடியவில்லை? பேரூந்து ஓட்டுனர்களில் சிலர் குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதை எந்த சட்டத்தாலும் தடுக்க முடியவில்லையே?இவற்றை எல்லாம் பற்றி கவலைப் படாத நீதி மன்றங்கள் இரு சக்கர வாகன ஓட்டிகள் மீது மட்டும் அதிக கவனம் செலுத்துவது ஏன்?அவற்றால்தான் அதிக விபத்து ஏற்படுகிறது என்பதாலா?குறைவான விபத்துகள் நடந்தால் பரவாயில்லையா? இவற்றை எல்லாம் சட்டத்தின் மூலம் சரி செய்வதை விட விழிப்புணர்வு முலமே சரி செய்ய இயலும். மக்களை குற்றவாளிகளாக மாற்றும் சட்டங்களை விட ஹெல்மெட் அணியாது வாகனம் ஓட்டும் போது ஏற்படும் விபத்துகளுக்கான இன்ஷுரன்ஸ் தொகையை பாதியாக குறைக்கலாம். ஹெல்மெட்டிற்கான வரிகளை முற்றிலுமாய் நீக்கி எவ்வளவு குறைவான விலையில் கொடுக்க முடியுமோ அவ்வளவு குறைவான விலையில் கிடைக்க செய்யலாம். புதிய இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்படும்போது  இரண்டு ஹெல்மெட்டுகளையும் சேர்த்து அளிக்கப்பட வேண்டும் என சட்டம் கொண்டுவரலாம். டிவி, திரை அரங்குகள் நாளிதழகள் எல்லாவற்றிலும் ஹெல்மெட்டின் அவசியம் குறித்த விளம்பரங்களை தொடர்ந்து வெளி வர செய்யலாம் இதற்கு ரோட்டரி லையன்ஸ் போன்ற அமைப்புகளின் உதவியை நாடலாம். கல்வி நிலையங்களில் இது குறித்து வீடியோக்களின் மூலம் பரப்புரை செய்யலாம்.வெப்ப நாடான நமது நாட்டிற்கு ஏற்ற வகையில் ஹெல்மெட் தயாரிக்க உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அவ்வாறான ஹெல்மெட்டுகளே விற்பனை செய்யப்பட வேண்டும் இது போன்று வழி முறைகளை நடை முறைபடுத்தும்போது மக்கள் விழிப்புணர்வு பெற்று தாங்களாகவே ஹெல்மெட் அணிய முன் வருவார்கள் என்பது நிச்சயம்.

வெள்ளி, 22 மே, 2015

திட்டங்கள் பல போட்டும் திங்களும் வியாழனும் பட்டினியா



பெருந்தலைவர் காமராஜ் அவர்களைப் போன்ற ஒரு நேர்மையான எளிமையானத் தலைவரை இனி தமிழகம் சந்திக்குமா என்பது சந்தேகமே. அவருடைய ஆட்சிக்காலம் தமிழகத்தின் பொற்காலம் என்பதிலும் எவ்வித ஐயப்பாடும் கிடையாது. இப்படிப்பட்ட ஒரு தலைவர் 1967 தேர்தலில் தனது சொந்தத் தொகுதியில்  அதிகம் அறியப்படாத ஒரு மாணவத் தலைவரிடம் தோற்கும் நிலை எப்படி ஏற்பட்டது? திமுகவின் கவர்ச்சிகரமான பிரச்சார உத்திகளும் சினிமா கவர்ச்சியும் எம்ஜியார்  சுடப்பட்டதும் தான் காரணமா?இந்த காரணங்கள் 50% மட்டுமே காங்கிரஸின் தோல்விக்கு காரணமாயிருந்தன. 1962 தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் வென்றிருந்தாலும் பல மாநிலங்களில் தோல்வியைத் தழுவியது. எனவே காங்கிரஸிற்கு வலுவூட்ட வேண்டுமென்று நினைத்த காமராஜ் அவர்கள் முதியவர்கள் இளை ஞர்களுக்கு வழிவிட்டு கட்சிப் பணி ஆற்ற வேண்டுமென ஒரு திட்டம் கொண்டுவந்தார். கே ப்ளான் என பின்னர் அழைக்கப்பட்ட இந்தத் திட்டத்தின்படி காமராஜ் தனது முதலமைச்சர் பதவியை துறந்தார். அதுதான் தமிழக காங்கிரஸின் வீழ்ச்சிக்கு முழு முதல் காரணமாய் அமைந்தது. இந்த்த் திட்டத்தின்படி பதவி விலகிவர்களில் திரு காமராஜ் மட்டுமே குறிப்பிடும்படியானத் தலைவராகும். மற்ற எவரும் பதவியை அவ்வளவு எளிதில் துறக்க முன் வரவில்லை.. தமிழகத்தில் திரு பக்தவசலம் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். திரு பக்தவசலம் திறமையான நிர்வாகி. ஆனால் சரியான அரசியல்வாதி அல்ல.அவர் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கையாண்ட விதம் தமிழகத்தில் மிகப் பெரும் கொதிப்பை உண்டாக்கியது.அப்பொழுது தமிழகத்திலிருந்து மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த திரு சி.சுப்ரமணியன் அவர்களும் திரு. ஓ.வி. அளகேசன் அவர்களும் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாகக் கூறி தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். ஆனாலும் தமிழக அரசு தனது கடுமையான நடவடிக்கைகளை நிறுத்தவில்லை. பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் இப்பிரச்சனையை தீர்க்க ஏன் முன் வரவில்லை என்ற திமுக தரப்பு வாதத்தில் நியாயம் இருப்பதாகவே மக்கள் நினைக்க ஆரம்பித்தனர்.  மேலும் அந்த நேரத்தில் தமிழகத்தில் நிலவிய அரிசி பஞ்சம் அதனை எதிர் கொள்ள மத்திய அரசோ தமிழக அரசோ உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுவதுபோல் டெல்லியிலிருந்து தமிழகம் வந்த சில மத்திய அமைச்சர்கள், அரிசி பஞ்சத்தைப் போக்க திங்கட்கிழமை ஒரு வேளையும் வியாழக்கிழமை ஒரு வேளையும் பட்டினி இருக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இது மக்களிடையே பெரும் வெறுப்பை ஏற்படுத்தியது. இதனை திமுக திறமையாக பயன்படுத்திக் கொண்டது. 'திட்டங்கள் பல போட்டும் திங்களும் வியாழனும் பட்டினியா" என்ற அதன் சுவரொட்டிகளில் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த அரிசி பிரச்சனையை ஏன் மத்திய மாநில காங்கிரஸரசுகளால் தீர்க்க முடியாமற் போனது என்பது விந்தையாகவே இருக்கிறது. பெருந்தலைவர் காமராஜ் மத்திய அரசிடம் மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்தும் ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் கோபம் அடைந்தனர். தேர்தலுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த திமுக இப்பிரச்சனையை சரியாக கையாளவே ரேஷன் அரிசி மக்களை சென்றடைந்தது (அதன் பிறகு இன்றுவரை அரிசி பிரச்சினையே இல்லை என்பதோடு மக்களுக்கு இலவசமாகவும் அரிசி வழங்கப்படுகிறது).இப்பிரச்சனையே காங்க்கிரஸின் வீழ்ச்சிக்கு மிகப் பெரும் காரணமாய் அமைந்தது. திரு அண்ணாதுரை அவர்கள் அரசியல் மேடைகளில் திரு காமராஜ் அவர்களை கடுமையாக தாக்கிப் பேசினாலும் தனிப்பட்ட முறையில் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். எனவேதான் அவரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தக் கூட யோசனை செய்தார். திரு சீனிவாசன் அவர்கள் போட்டியிட தீர்மானித்ததும் தான் அந்த தொகுதிக்கு பிரச்சாரம் செய்ய வரப் போவதில்லை எனத் தெரிவித்துவிட்டார். இருந்தும் கடுமையான அரிசி பஞ்சம் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் செய்யப்பட்ட கடுமையான அடக்குமுறைகள் காங்கிரஸின் வீழ்ச்சிக்கும் திரு காமராஜ் அவர்களின் தோல்விக்கு காரணமாய் அமைந்தது. இப்பொழுதெல்லாம் திரு காமராஜ் அவர்களின் தோல்விக்கு மக்களின் அறியாமையும் திமுகவின் மாய்மால பிரச்சாரங்களுமே காரணமென ஊடகங்களில் பதிவுகள் செய்யப்படுகிறது. மக்கள் அறியாமையினால் திமுகவிற்கு வாக்களிக்கவில்லை. அன்றிருந்த சூழல் அவர்களுக்கு இருந்த பிரச்சனைகள் அவற்றின் அடிப்படையில்தான் வாக்களிக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர வேண்டும்.

திங்கள், 11 மே, 2015

தமிழகத்தில் வாழ்ந்த சில பைத்தியக்காரர்கள்



இளவரசனின் தேர் காலில் விழுந்து இறந்த கன்றின் உரிமையாளனிடம்  "சாலையில் ஏன் கன்றினை அவிழ்த்துவிட்டாய் இவனை சிறையில் அடையுங்கள்" என உத்தரவிடாமல் தன் மகனை தேர் காலில் இட்ட அரைக்க முனைந்தானே மனு நீதி சோழன் அவன் பைத்தியம் அல்லவா?

கண்ணகி இன்னொரு சிலம்பினை கொண்டு வந்து தன் கணவன் குற்றவாளி இல்லை என சொன்னவுடன் "ஆகா இதோ இன்னொரு சிலம்பும் கிடைத்துவிட்டது மனைவியும் கணவனும் கூட்டு களவாணிகள் இவளை சிறையில் அடையுங்கள்" என உத்தரவிடாமல் யானோ அரசன் யானே கள்வன் என உயிர் விட்டானே பாண்டியன் நெடுஞ்செழியன்  அவன் ஒரு பைத்தியகாரன்!

பிழையான பாட்டை கொண்டு வந்தது இறைவன் எனத் தெரிந்ததும்  "என்ன ஒரு அருமையான கவிதை சிவனின் பாடலை இந்த சிறுவன் எடைபோட முடியுமா?" எனப் புகழ்ந்து வேண்டிய வரங்களை பெறுவதை விட்டு நெற்றி கண்ணை காட்டினும் குற்றம் குற்றமே என எரிந்து போனானே நக்கீரன் அவன் ஒரு பைத்தியகாரன்!

முல்லை கொடி தன் தேர் மீது படர்ந்திருப்பதை பார்த்ததும் "தேர் நிலையை சரியாக பராமரிக்காதப் பணியாளர்களை உடன் சஸ்பெண்ட் செய்யுங்கள்" என உத்தரவிடாமல் தனது தேரை அங்கேயே நிறுத்திவிட்டுப் போனானே வள்ளல் பாரி அவன் ஒரு பைத்தியகாரன் அல்லவா?

அடுத்து இவன் தான் ஆட்சிக்கு வருவான் என இளங்கோவடிகளை பார்த்து ஆரூடக்காரன் சொன்னவுடன் "அப்படியா? அப்படியென்றால் ஆக வேண்டியதை கவனியுங்கள்.எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை" என சொல்லாமல் அண்ணனுக்காக ஆட்சியை துறந்தாரே இளங்கோவடிகள் அவர் ஒரு பைத்தியகாரர்!

நீரைத் தேக்கி அதனை பாசனத்திற்கு பயன்படுத்தலாம் என்று அக்காலத்தில் கனவில் கூட யாரும் காணாத சிந்தனையை நனவாக்கி அதற்கு கரிகாலன் அணை எனப் பெயரிடாமல் கல்லணை என்று பெயரிட்ட கரிகால் பெரு வளத்தான் அவன் ஒரு பைத்தியகாரன்!

உலகெங்கும் ஆட்சி செய்த மன்னர்கள் எல்லாம் தங்கள் அரண்மனைகளை இன்றும் உலகம் வியக்கும் வண்ணம் அமைத்து வாழ்ந்திருக்கிறார்களே   ஆனால் நம் தமிழ் மன்னர்கள் என்ன செய்தார்கள் பெரும் பெரும் ஆலயங்களை நிறுவினார்களைத் தவிர தங்கள் அரண்மணைகளை அவ்வாறு எவரும் நிர்மாணிக்கவில்லையே அவர்கள் அத்தனை பேருமே பைத்தியகாரர்களன்றி வேறென்ன சொல்வது?

வெள்ளி, 8 மே, 2015

சல்மான் வழக்கிற்கும் இதற்கும் தொடர்பில்லை



சமன் செய்து சீர் தூக்கும் அப்படின்னு வள்ளுவர் ஏதோ எழுதி வச்சுட்டு போயிட்டார். நம்ம நாட்டு சட்டத்தை வடிவமைச்சவங்களும் அதையே பின்பற்றி செஞ்சுட்டு போய்ட்டாங்க.ஆனால் இவ்வளவு பெரிய ஜனநாயக நாட்டில அதெல்லாம் சரிபடுமா? அதனால நம்ம  குற்றவியல் சட்டத்தில உடனடியா சில மாற்றங்களை கொண்டு வரணும் முதல்ல ஜனங்களை நாலா பிரிக்கணும்.அய்யயோ வர்ணாஸ்ரம் இல்லிங்க இது வேற மாதிரி. 

முதல்ல A க்ருப். இதில அரசியல் வாதிங்க பெரிய ஆஃபிசருங்க இவங்கள்ளாம் அடங்குவாங்க.இவங்கள்ளாம் என்ன தப்பு செஞ்சாலும் ஒரு FIR கூட போடக் கூடாது. அவங்க தப்புக்கு தகுந்த மாதிரி பத்ம பூஷன் பாரத் ரத்னா போன்ற விருதுகளுக்கு இணையா ஏதேனும் விருது கொடுத்து கௌரவிக்கணும்.

ரெண்டாவது B க்ருப்.இதில பிரபலமான நடிகர்கள் விளையாட்டு வீரர்கள் இவர்கள் எல்லாம் அடங்குவாங்க. இவங்க தப்பு செஞ்சா FIR  போடலாம்.ஆனால் சாட்சி சொல்ல யாரும் வரக் கூடாது. இவங்க தண்ணி அடிச்சுட்டு வண்டி ஓட்டுனா மதுவோட தீமையை விளக்கத்தான் அப்படி செஞ்சாங்கன்னு அரசாங்கமே மக்களுக்கு எடுத்து சொல்லனும். ட்ராபிக்ல யாரையாவது அடிச்சு கொன்னுட்டாக் கூட, சட்டம் ஒழுங்கை காப்பாத்தத்தான் அப்படி செஞ்சாங்கன்னு அவங்களுக்கு பாராட்டு விழா நடத்தி பரிசும் கொடுக்கலாம். இதையெல்லாம் மீறி அவங்களுக்கு தண்டனை கொடுத்துத்தான் ஆகனும்னு ஒரு நிலை வந்துட்டா அந்த தண்டணையை அவங்க சார்பா வேற யாராவது அனுபவிக்கிற மாதிரி சட்டத்தில் மாற்றம் கொண்டு வரணும். அவங்க நடிச்ச படம் வரலைன்னா மக்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை எண்ணி உடனே இந்த சட்ட மாற்றத்தை கொண்டு வரணும். முடிஞ்சா இவங்க மேல  FIR  போட்ட அந்த ஆபிசருக்கு ஆயுள் தண்டனை வழங்கலாம்.

மூணாவது C க்ருப். இதில் எம் எல் ஏ க்கள் கவுன்கிலர்கள் இரண்டாம் நிலை அதிகாரிகள் இவர்கள் அடங்குவார்கள். இவர்கள் மீது FIR  போடலாம்.கைதும் செய்யலாம். ஆனால் விசாரணையை சீக்கிரம் முடிக்கக் கூடாது. மக்கள் பரபரப்பா வேறு விஷயத்தில் ஆழ்ந்திருக்கும்போது இவங்களை ரீலீஸ் பண்ணிடலாம்.இவங்க பெரும்பாலும் தங்கள் மேல் மட்டதின் மீதான விசுவாசத்தை காண்பிக்கத்தான் குற்றங்களில் ஈடுபடுவதால், இவர்கள் விடுதலை ஆனவுடன், எம் எல் ஏவாக இருந்தால் மந்திரியாகவும் கவுன்ஸிலராக இருந்தா எம் எல் ஏ வாகவும் ப்ரமோஷன் கொடுக்கலாம்.

நான்காவது D க்ருப்.இதில் கடை நிலை ஊழியர்கள் நம்மை போன்று அப்பாவி மக்கள் அடங்குவார்கள். இவர்களை அறிவிக்கப்பட்ட குற்றவாளிகள்  எனப் பிரகடனம் செய்யலாம்.ஐம்பது ரூபா லஞ்சம் வாங்குற கீழ் மட்ட அலுவலர்களை சும்மா விடக் கூடாது. அவங்களுக்கு கடுமையான தண்டணை கொடுக்கணும். அவங்க போட்டோவை பேப்பர் டிவியில் எல்லாம் போட்டு அசிங்கபடுத்தணும். அவங்க குடும்பத்தை எவ்வளவு அசிங்க படுத்த முடிமோ அந்த அளவு அசிங்கப்படுத்தனும். தண்ணி வரலைன்னு யாராவது போராட்டம் பண்ணினா அவங்களுக்கு  ஆயுள் தண்டனை கொடுக்கணும். இந்த மக்கள் அது வேணும் இது வேணும்னு ஏதாவது போராட்டம் பண்ணாமல் இருக்க ஒவ்வொரு வாக்களாருக்கும் ஒவ்வொரு வேட்பாளரும் ரூபாய் ஐநூறும் அரசாங்க சார்பா மானியமா ரூபாய் ஐநூறும்  ஒவ்வொரு தேர்தலின் போதும் கொடுக்கனும்னு சட்டத்தில் உடனடியா மாற்றம் கொண்டு வரணும். 

இந்த மாற்றங்களை உடனடியா கொண்டு வந்தா, நம்முடைய ஜனநாயகம் மேலும் வலுபெறும் என்பது நிச்சயம்.

வியாழன், 30 ஏப்ரல், 2015

நீதிமன்ற தீர்ப்புகளும் பாமரனின் சந்தேகமும்




தமிழக முதல்வர் அம்மாவின் மீதான சொத்து குவிப்பு வழக்கு கர்நாடக சிறப்பு நீதி மன்றத்தில் நடைபெற்று அதன் மேல் முறையீடு தற்பொழுது உயர் நீதி மன்றத்தில் ந்டை பெற்று வருவது அனைவரும் அறிந்ததே. வழக்கு குறித்தோ வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்தோ நிறைய விவாதங்கள் நடை பெற்று வருகின்றன. நம்முடைய நோக்கம் அவற்றை பற்றி விவாதிப்பது அல்ல. இவ்வழக்கு தொடர்பாக நீதி மன்றத்தின் சில உத்தரவுகள் நம்மை ஆச்சரியபடுத்துகின்றன.மேல் முறையீட்டின்போது கர்நாடக அரசு ஏன் வழக்கறிஞரை நியமிக்கவில்லை என்று உயர் நீதிமன்றம் ஏன் கேள்வி எழுப்பவில்லை? வழக்கின்போது திரு பவானி சிங் ஆஜராகக் கூடாது என திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டபோது அதனை நிராகரித்த உயர் நீதிமன்றம் உச்ச நீதீ மன்றத்தில் வழக்குத் தொடர அறிவுறுத்தியது.திமுக சார்பில் உச்ச நீதீ மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யபட்ட போது மேல் முறையீட்டு வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்க ஏன் உச்ச நீதிமன்றம் உத்தரவிடவில்லை.? வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாக வேண்டிய தருணத்தில் திரு பவானி சிங்கை தமிழக அரசு நியமித்தது தவறென்றும் எனவே புதியதாக ஒரு வழக்கறிஞரை கர்நாடக அரசு நியமிக்க வேண்டுமெனவும்,ஆனால் அதற்காக மறு விசாரணை நடத்த தேவையில்லை எனவும் திரு பவானி சிங்கின் வாதங்களை புறக்கணித்து விட்டு புதிய வழக்கறிஞர் எழுத்து மூலமாக கொடுக்கவுள்ள ஆதரங்களை பரிசீலனை செய்து தீர்ப்பு வழங்கவும் என ஒரு வித்தியாசமான தீர்ப்பை வழங்கியுள்ளது. திரு பவானி சிங் வாதிட்ட அந்த நாட்கள் எல்லாம் தேவையின்றி உயர் நீதி மன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடித்தது போல் ஆகவில்லையா? திமுக மனு தாக்கல் செய்தவுடனேயே வழக்கு விசாரணையை நிறுத்த உத்தரவு பீறப்பித்துவிட்டு, பவானி சிங் நியமனம் தொடர்பான வழக்கு முடிவடைந்தவுடன் விசாரணையை மேற்கொண்டிருக்கலாமே என்பதுதான் எங்களை போன்று சட்டம் படிக்காத பாமரர்களின் கேள்வியாக இருக்கிறது

சனி, 25 ஏப்ரல், 2015

கல்வீயில் மாற்றம் வேண்டும்

பொதுவாக எங்க காலத்துல அப்படின்னு யாராவது பேச்சை ஆரம்பிச்சாங்கன்னா ரொம்ப பேருக்கு பிடிக்காது. எனக்குக் கூடத்தான். ஆனால் நானே இப்பொழுது அப்படி ஒன்றை சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறேன். ப்ள்ஸ் டூ ரிசல்ட் மே மாதம் எதோ ஒரு தேதியை குறிப்பிட்டு அன்று வெளியாகுமென  அதை ஒரு முக்கியமான செய்தியாக அனைத்து தொலை காட்சிகளும் ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. உண்மைதான்.இன்றைய கால கட்டத்தில் இது ஒரு முக்கியமான நிகழ்வுதான். ஆனால் எங்களுடைய காலத்தில் இருந்த ஒரு அறை குறையான சமூக பொறுப்பு கூட இன்றைய கல்வி முறையில் இல்லையோ என ஒரு ஐயம் எனக்குள் வருகிறது.நாங்களும் மாணவர்களை வெறும் மனப்பாடக் கருவிகளாக்கும் இதே  மெக்காலே கல்வி முறையில் பயின்றவர்கள்தான் என்றாலும், முப்பதாண்டுகளுக்கு முன்பு பள்ளிகளில் ஒழுக்கத்தையும் நீதியையும் விளையாட்டுகளையும் கற்பிக்க முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டது. ஆனால் இப்பொழுது ப்ளஸ் டூ வில் மார்க் எடுப்பது ஒன்று மட்டுமே முன் நிறுத்தப்பட்டு அதற்கான தயாரிப்புகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. பல பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களே கிடையாது. நீதி போதனை வகுப்புகள் கிடையாது.குடிமை பயிற்சிக்கான தனி வகுப்புகள் இல்லை. ஒரு சிலப் பள்ளிகளில் இவற்றிற்கெல்லாம் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தாலும் அந்த நேரங்களில் வேறு பாடங்களே நடத்தப்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால் ப்ள்ஸ் 1 வகுப்பகளில் கூட ப்ளஸ் டூவிற்கான பாடங்களே பெரும்பான்மையானப் பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகின்றன. மொழிப் பாடங்களுக்கான முக்கியத்துவம் முற்றிலுமாக குறைந்து விட்டது. இதற்கெல்லாம் பள்ளிகளை குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை..ப்ளஸ் டூ முடித்தவுடன் பொறியல் கல்லூரிகளிலோ அல்லது மருத்துவ கல்லூரிகளிலோ சேர்வதற்கு மொழிப் பாட மதிப்பெண்கள் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை என்பதே முக்கிய காரணம்.,இதனால் மாணவர்களுக்கு மொழி மற்றும் இலக்கியம் மீதான ஆர்வம் மிகவும் குறைந்து வருகிறது. இந்த நிலையினை மாற்றம் செய்ய அரசு கல்வி முறையில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.மெக்காலே முறையை உடனடியாக உடனே அகற்ற முடியாதெனினும் கொஞ்சம் கொஞ்சமாக சில மாற்றங்களை கொண்டு வர அரசு முன் வர வேண்டும்.
ப்ளஸ் 1 முடிவில் மொழிப் பாடங்களுக்காண பொது தேர்வு அறிமுகப் படுத்தப்பட வேண்டும்.அதில் பெறும் மதிப்பெண்களில் ஏதேனும் ஒரு சத விகிதத்தை  தொழிற்கல்வி தகுதிக்கான மதிப்பெண்களுடன் இணைக்கப் பட வேண்டும்..
விளையாட்டுகளுக்காக மதிப்பெண் வழங்கப்பட்டு அவற்றையும் தகுதிக்கான மதிப்பெண்களோடு சேர்க்க வேண்டும்.
குடிமை பயிற்சி மற்றும் நீதி வகுப்புகள் ஆறாம் வகுப்புகளில் இருந்து கல்லூரிகள் வரை நடத்தப்படவேண்டும். குடிமை பயிற்சி வகுப்புகளில் ஒரு நல்ல குடி மகனாக எப்படி வாழ வேண்டும் என்பது போதிக்கப் பட வேண்டும்.வன்முறை போராட்டங்களில் பொது சொத்துக்கள் எப்படி நாசப் படுத்தப் படுகின்றன அதனால் மக்கள் வரிப் பணம் எப்படி வீணடிக்கப்படுகிறது என்பதை வீடியோக்கள் மூலம் மாணவ்ரகளுக்கு விளக்க வேண்டும். சாதி மத கலவரங்களால் மனிதம் எப்படி பாதிக்கப் படுகிறது .மதுவினால் ஏற்படும் பாதிப்புகள், லஞ்ச ஊழல் லாவண்யங்களால் ஏற்படும் விபரீதங்கள் ஆகியவையும் மாணவ்ர்களுக்கு எடுத்து சொல்லப்பட வேண்டும். மேலை நாடுகளில் போக்குவரத்து விதிகள் எவ்வாறு தவறாமல் கடை பிடிக்கப் படுகிறது, மக்கள் எங்கு சென்றாலும் ஒருவரையொருவர் தள்ளிக் கொள்ளாமல் வரிசையில் நின்று எப்படி பயன் பெறுகிறார்கள் போன்றவற்றையும் போதிக்கப்பட வேண்டும். ஏழை எளியவர்களுக்கு உதவுதல் பெண்களிடம் ஒழுக்கமாக நடந்து கொள்ளுதல்,ஊனமுற்றவர்கள் முதியவர்களிடம் எவ்வாறு பண்புடன் நடந்து கொள்ளுதல் இதை போன்று இன்னும் பலவற்றையும் நீதி போதனை வகுப்புகளில் சொல்லி கொடுக்கலாம். மாணவர்களின் ஒரு சத விகிதத்தினராவது இவற்றை உள் வாங்கினால் அடுத்தத் தலை முறையிலாவது நமது தமிழகம் இந்தியாவின் முன் மாதிரி மாநிலமாகத் திகழும் வாய்ப்பினை பெறும்.


வியாழன், 23 ஏப்ரல், 2015

பிச்சைகாரர்... சிறுகதை

அன்று திங்கட் கிழமை
கலெக்டரிடம் மனு கொடுக்க நீண்ட வரிசை நின்றிருந்தது.
ஒரு கிழவர் தடுமாறியபடியே நின்று கொண்டிருந்தார்.

கலெக்டர் அவரை அருகில் அழைத்தார்.

"பெரியவரே உங்களுக்கு என்ன வேண்டும்"

"அய்யா எனக்கு ஒரு சர்ட்பிகேட் வேணும். ரெண்டு வருஷமா அலையிறேன். இன்னும் கெடைக்கலை"

"என்ன சர்டிபிகேட்  பெரியவரே"

"அய்யா எங்க ஊரில் ஒரு தர்ம ஸ்தாபனம் இருக்கு.அவுங்க பிச்சை எடுத்து ஜீவனம் செய்றவங்களுக்கு உதவி செய்ராங்க. எனக்கு பிச்சை எடுத்துதான் ஜீவனம் செய்றேன்னு ஒரு சர்டிபிகேட் வேணும் அவ்வளவுதான்"

உடனே கலெக்டர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை ஏவ, எல்லோரும் பர பரவென அந்த கிழவரிடம் ஓடி வந்து, ஏதோ விசாரணை செய்து விட்டு, அரை மணி நேரத்தில் சர்டிபிகேட்டோட ஓடி வந்து கலெக்டரிடம் கொடுத்தார்கள்.

கலெக்டர் உடனே அந்த கிழவரை அழைத்தார்.

"இதோ உங்கள் சர்டிபிகேட் வாங்கிக் கொள்ளுங்கள்"

கிழவர் சொன்னார்

"அய்யா மன்னிக்கணும் இந்த சர்டிபிகேட்ல என் பெயருக்கு பதிலா அதோ அந்த வெள்ள பேண்ட் போட்டுட்டு இருக்காரே அந்த ஆபிசர் அவர் பேரை போட்டு கொடுத்துடுங்க. அவர்தான் என்னை விட அதிக கஷ்டத்தில இருக்கார், எங்கிட்டய இருபத்தஞ்சு ரூபா கொடுத்தா தான் சர்டிபிகேட் கொடுப்பேன்னு ரெண்டு வருஷமா சொல்லிகிட்டிருந்தார் பாவம்"

சொல்லிக் கொண்டே கிழவர் அங்கிருந்து நகர, கலெக்டர் முதல் அத்தனை ஆபிசர்களும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.


வெள்ளி, 27 மார்ச், 2015

கிரிக்கெட் தோல்வியும் சில கிறுக்குத்தனங்களும்





உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடங்குவதற்கு முன் நடந்த இரண்டு பயிற்சி ஆட்டங்களில் இந்தியா மோசமாகத் தோற்றது. அதனால் இம்முறை உலக கோப்பைப் போட்டியில் இந்தியா மிகவும் கடுமையானத் தோல்வியை சந்திக்கும் என்றே பலரும் நினைத்தனர்.ஆனால் லீக் ஆட்டங்களில் நமது வீரர்கள் தங்கள் அற்புதமான ஆட்டத்தை வெளிப் படுத்தி ஆறு ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றி பெற்றதுடன் கால் இறுதியில் பங்ளாதேஷையும் வீழ்த்தி சாதனை புரிந்தனர். அடுத்தது அரை இறுதி ஆஸ்திரேலியாவுடன் என்றதுமே வெற்றி வாய்ப்பு 50/50 தான் என்பது அனைவருக்கும் தெரிந்தே இருந்தது. அதிலும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணி டாஸையும் வெல்ல வெற்றி அதன் பக்கம் சாய்ந்தது. இந்தியா தோல்வியைத் தழுவியது. அவ்வளவுதான்.. 

சிலர் இதற்காகவே காந்திருந்தது போல் கிரிக்கெட்டை பற்றியும் கேப்டன் தோனியைப் பற்றியும் நமது வீரர்களை பற்றியும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்து விட்டனர், 

சிலர் ஒரு படி மேலே போய் வீராட் கோலியின் பர்சனல் விஷயங்களில் எல்லாம் தலையிட்டு ஏதோ அவர் காதலியினால்தான் அவர் சரியாக விளயாடாதது போல் விமர்சிக்கிறார்கள்.எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் சில நேரங்களில் தடுமாறுவது ஒன்றும் அதிசயமில்லை.அதற்காக இப்படியெல்லாம் கேவலப்படுத்துவது நாகரிமானவர்கள் செய்யக்கூடியது அல்ல. 

ஒரு திரைப் பட இயக்குனர் நமது மக்களை சோம்பேறியாக்கும் கிரிகெட் ஒழிய வேண்டும் அதனால் இப்படிப் பட்ட தோல்விகள் அடிக்கடி நடக்க வேண்டும் என்று சாபமிடுகிறார். நமது திரைப் படங்களை விடவா கிரிக்கெட் இந்த நாட்டை சீரழிக்கிறது? நமது மக்கட்த் தொகையில் ஒரு சத வீதமோ இரண்டு சதவீத மக்களோதான் கிரிகெட் ரசிகர்களாக  இருக்கிறார்கள்.ஆனால் திரைப்படம் பார்க்கும் மக்கள் எத்தனை சத வீதம்? 

விளையாட்டில் வெற்றித் தோல்வி என்பது தவிர்க்க முடியாத ஒன்றுதான். அதைப் போலவே ஒரு நாட்டில் சில விளையாட்டுகளில் மக்கள் ஆர்வம் காட்டுவதும் இயல்பானதே. ஐரோப்பிய நாடுகளில் கால்பந்து எவ்வளவு தீவிரமாக ரசிக்கப்படுகிறது என்பதை அனைவரும் அறிவர்.அதைப்போலவே அமெரிக்கா போன்ற நாடுகளில் கூடைப்பந்தும் வேறு சில நாடுகளில் டென்னிஸ் போன்ற விளையாட்டுகளும் மக்களால் பெரிதும் விரும்பப்படுகிறது. அங்கெல்லாம் யாரும் ஐயோ இங்கு வேறு விளயாட்டே இல்லையே என்று வருத்தப்படுவதோ விமர்சிப்பதோ இல்லை.நாம் மட்டும் ஏன் இப்படி இருக்கிறோம்? 

Times Now என்ற ஊடகத்தில் நமது கிரிக்கெட் வீரர்கள் பற்றி மோசமாக விமர்சிக்கப்படுவதுடன் அரை இறுதி தோல்விக்கு தோனியின் தலைமைதான் காரணமென்று மன சாட்சி இல்லாத விமர்சனம் முன் வைக்கப்படுகிறது. பலரால் விரும்பப்படும் ஒன்றைப் பற்றி கடுமையாக விமர்சனம் செய்தால் அதனால் எழும் விவாதங்கள் மூலம் புகழ் பெறலாம் என்பது நமது நாட்டில் தற்பொழுது ஒரு நடை முறை ஆகிவிட்டது. இந்த கிறுக்குத் தனங்களுக்கு முடிவு எப்பொழுது வரும்?