வெள்ளி, 27 மார்ச், 2015

கிரிக்கெட் தோல்வியும் சில கிறுக்குத்தனங்களும்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடங்குவதற்கு முன் நடந்த இரண்டு பயிற்சி ஆட்டங்களில் இந்தியா மோசமாகத் தோற்றது. அதனால் இம்முறை உலக கோப்பைப் போட்டியில் இந்தியா மிகவும் கடுமையானத் தோல்வியை சந்திக்கும் என்றே பலரும் நினைத்தனர்.ஆனால் லீக் ஆட்டங்களில் நமது வீரர்கள் தங்கள் அற்புதமான ஆட்டத்தை வெளிப் படுத்தி ஆறு ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றி பெற்றதுடன் கால் இறுதியில் பங்ளாதேஷையும் வீழ்த்தி சாதனை புரிந்தனர். அடுத்தது அரை இறுதி ஆஸ்திரேலியாவுடன் என்றதுமே வெற்றி வாய்ப்பு 50/50 தான் என்பது அனைவருக்கும் தெரிந்தே இருந்தது. அதிலும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணி டாஸையும் வெல்ல வெற்றி அதன் பக்கம் சாய்ந்தது. இந்தியா தோல்வியைத் தழுவியது. அவ்வளவுதான்.. 

சிலர் இதற்காகவே காந்திருந்தது போல் கிரிக்கெட்டை பற்றியும் கேப்டன் தோனியைப் பற்றியும் நமது வீரர்களை பற்றியும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்து விட்டனர், 

சிலர் ஒரு படி மேலே போய் வீராட் கோலியின் பர்சனல் விஷயங்களில் எல்லாம் தலையிட்டு ஏதோ அவர் காதலியினால்தான் அவர் சரியாக விளயாடாதது போல் விமர்சிக்கிறார்கள்.எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் சில நேரங்களில் தடுமாறுவது ஒன்றும் அதிசயமில்லை.அதற்காக இப்படியெல்லாம் கேவலப்படுத்துவது நாகரிமானவர்கள் செய்யக்கூடியது அல்ல. 

ஒரு திரைப் பட இயக்குனர் நமது மக்களை சோம்பேறியாக்கும் கிரிகெட் ஒழிய வேண்டும் அதனால் இப்படிப் பட்ட தோல்விகள் அடிக்கடி நடக்க வேண்டும் என்று சாபமிடுகிறார். நமது திரைப் படங்களை விடவா கிரிக்கெட் இந்த நாட்டை சீரழிக்கிறது? நமது மக்கட்த் தொகையில் ஒரு சத வீதமோ இரண்டு சதவீத மக்களோதான் கிரிகெட் ரசிகர்களாக  இருக்கிறார்கள்.ஆனால் திரைப்படம் பார்க்கும் மக்கள் எத்தனை சத வீதம்? 

விளையாட்டில் வெற்றித் தோல்வி என்பது தவிர்க்க முடியாத ஒன்றுதான். அதைப் போலவே ஒரு நாட்டில் சில விளையாட்டுகளில் மக்கள் ஆர்வம் காட்டுவதும் இயல்பானதே. ஐரோப்பிய நாடுகளில் கால்பந்து எவ்வளவு தீவிரமாக ரசிக்கப்படுகிறது என்பதை அனைவரும் அறிவர்.அதைப்போலவே அமெரிக்கா போன்ற நாடுகளில் கூடைப்பந்தும் வேறு சில நாடுகளில் டென்னிஸ் போன்ற விளையாட்டுகளும் மக்களால் பெரிதும் விரும்பப்படுகிறது. அங்கெல்லாம் யாரும் ஐயோ இங்கு வேறு விளயாட்டே இல்லையே என்று வருத்தப்படுவதோ விமர்சிப்பதோ இல்லை.நாம் மட்டும் ஏன் இப்படி இருக்கிறோம்? 

Times Now என்ற ஊடகத்தில் நமது கிரிக்கெட் வீரர்கள் பற்றி மோசமாக விமர்சிக்கப்படுவதுடன் அரை இறுதி தோல்விக்கு தோனியின் தலைமைதான் காரணமென்று மன சாட்சி இல்லாத விமர்சனம் முன் வைக்கப்படுகிறது. பலரால் விரும்பப்படும் ஒன்றைப் பற்றி கடுமையாக விமர்சனம் செய்தால் அதனால் எழும் விவாதங்கள் மூலம் புகழ் பெறலாம் என்பது நமது நாட்டில் தற்பொழுது ஒரு நடை முறை ஆகிவிட்டது. இந்த கிறுக்குத் தனங்களுக்கு முடிவு எப்பொழுது வரும்?