வியாழன், 30 ஏப்ரல், 2015

நீதிமன்ற தீர்ப்புகளும் பாமரனின் சந்தேகமும்
தமிழக முதல்வர் அம்மாவின் மீதான சொத்து குவிப்பு வழக்கு கர்நாடக சிறப்பு நீதி மன்றத்தில் நடைபெற்று அதன் மேல் முறையீடு தற்பொழுது உயர் நீதி மன்றத்தில் ந்டை பெற்று வருவது அனைவரும் அறிந்ததே. வழக்கு குறித்தோ வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்தோ நிறைய விவாதங்கள் நடை பெற்று வருகின்றன. நம்முடைய நோக்கம் அவற்றை பற்றி விவாதிப்பது அல்ல. இவ்வழக்கு தொடர்பாக நீதி மன்றத்தின் சில உத்தரவுகள் நம்மை ஆச்சரியபடுத்துகின்றன.மேல் முறையீட்டின்போது கர்நாடக அரசு ஏன் வழக்கறிஞரை நியமிக்கவில்லை என்று உயர் நீதிமன்றம் ஏன் கேள்வி எழுப்பவில்லை? வழக்கின்போது திரு பவானி சிங் ஆஜராகக் கூடாது என திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டபோது அதனை நிராகரித்த உயர் நீதிமன்றம் உச்ச நீதீ மன்றத்தில் வழக்குத் தொடர அறிவுறுத்தியது.திமுக சார்பில் உச்ச நீதீ மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யபட்ட போது மேல் முறையீட்டு வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்க ஏன் உச்ச நீதிமன்றம் உத்தரவிடவில்லை.? வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாக வேண்டிய தருணத்தில் திரு பவானி சிங்கை தமிழக அரசு நியமித்தது தவறென்றும் எனவே புதியதாக ஒரு வழக்கறிஞரை கர்நாடக அரசு நியமிக்க வேண்டுமெனவும்,ஆனால் அதற்காக மறு விசாரணை நடத்த தேவையில்லை எனவும் திரு பவானி சிங்கின் வாதங்களை புறக்கணித்து விட்டு புதிய வழக்கறிஞர் எழுத்து மூலமாக கொடுக்கவுள்ள ஆதரங்களை பரிசீலனை செய்து தீர்ப்பு வழங்கவும் என ஒரு வித்தியாசமான தீர்ப்பை வழங்கியுள்ளது. திரு பவானி சிங் வாதிட்ட அந்த நாட்கள் எல்லாம் தேவையின்றி உயர் நீதி மன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடித்தது போல் ஆகவில்லையா? திமுக மனு தாக்கல் செய்தவுடனேயே வழக்கு விசாரணையை நிறுத்த உத்தரவு பீறப்பித்துவிட்டு, பவானி சிங் நியமனம் தொடர்பான வழக்கு முடிவடைந்தவுடன் விசாரணையை மேற்கொண்டிருக்கலாமே என்பதுதான் எங்களை போன்று சட்டம் படிக்காத பாமரர்களின் கேள்வியாக இருக்கிறது

சனி, 25 ஏப்ரல், 2015

கல்வீயில் மாற்றம் வேண்டும்

பொதுவாக எங்க காலத்துல அப்படின்னு யாராவது பேச்சை ஆரம்பிச்சாங்கன்னா ரொம்ப பேருக்கு பிடிக்காது. எனக்குக் கூடத்தான். ஆனால் நானே இப்பொழுது அப்படி ஒன்றை சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறேன். ப்ள்ஸ் டூ ரிசல்ட் மே மாதம் எதோ ஒரு தேதியை குறிப்பிட்டு அன்று வெளியாகுமென  அதை ஒரு முக்கியமான செய்தியாக அனைத்து தொலை காட்சிகளும் ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. உண்மைதான்.இன்றைய கால கட்டத்தில் இது ஒரு முக்கியமான நிகழ்வுதான். ஆனால் எங்களுடைய காலத்தில் இருந்த ஒரு அறை குறையான சமூக பொறுப்பு கூட இன்றைய கல்வி முறையில் இல்லையோ என ஒரு ஐயம் எனக்குள் வருகிறது.நாங்களும் மாணவர்களை வெறும் மனப்பாடக் கருவிகளாக்கும் இதே  மெக்காலே கல்வி முறையில் பயின்றவர்கள்தான் என்றாலும், முப்பதாண்டுகளுக்கு முன்பு பள்ளிகளில் ஒழுக்கத்தையும் நீதியையும் விளையாட்டுகளையும் கற்பிக்க முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டது. ஆனால் இப்பொழுது ப்ளஸ் டூ வில் மார்க் எடுப்பது ஒன்று மட்டுமே முன் நிறுத்தப்பட்டு அதற்கான தயாரிப்புகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. பல பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களே கிடையாது. நீதி போதனை வகுப்புகள் கிடையாது.குடிமை பயிற்சிக்கான தனி வகுப்புகள் இல்லை. ஒரு சிலப் பள்ளிகளில் இவற்றிற்கெல்லாம் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தாலும் அந்த நேரங்களில் வேறு பாடங்களே நடத்தப்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால் ப்ள்ஸ் 1 வகுப்பகளில் கூட ப்ளஸ் டூவிற்கான பாடங்களே பெரும்பான்மையானப் பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகின்றன. மொழிப் பாடங்களுக்கான முக்கியத்துவம் முற்றிலுமாக குறைந்து விட்டது. இதற்கெல்லாம் பள்ளிகளை குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை..ப்ளஸ் டூ முடித்தவுடன் பொறியல் கல்லூரிகளிலோ அல்லது மருத்துவ கல்லூரிகளிலோ சேர்வதற்கு மொழிப் பாட மதிப்பெண்கள் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை என்பதே முக்கிய காரணம்.,இதனால் மாணவர்களுக்கு மொழி மற்றும் இலக்கியம் மீதான ஆர்வம் மிகவும் குறைந்து வருகிறது. இந்த நிலையினை மாற்றம் செய்ய அரசு கல்வி முறையில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.மெக்காலே முறையை உடனடியாக உடனே அகற்ற முடியாதெனினும் கொஞ்சம் கொஞ்சமாக சில மாற்றங்களை கொண்டு வர அரசு முன் வர வேண்டும்.
ப்ளஸ் 1 முடிவில் மொழிப் பாடங்களுக்காண பொது தேர்வு அறிமுகப் படுத்தப்பட வேண்டும்.அதில் பெறும் மதிப்பெண்களில் ஏதேனும் ஒரு சத விகிதத்தை  தொழிற்கல்வி தகுதிக்கான மதிப்பெண்களுடன் இணைக்கப் பட வேண்டும்..
விளையாட்டுகளுக்காக மதிப்பெண் வழங்கப்பட்டு அவற்றையும் தகுதிக்கான மதிப்பெண்களோடு சேர்க்க வேண்டும்.
குடிமை பயிற்சி மற்றும் நீதி வகுப்புகள் ஆறாம் வகுப்புகளில் இருந்து கல்லூரிகள் வரை நடத்தப்படவேண்டும். குடிமை பயிற்சி வகுப்புகளில் ஒரு நல்ல குடி மகனாக எப்படி வாழ வேண்டும் என்பது போதிக்கப் பட வேண்டும்.வன்முறை போராட்டங்களில் பொது சொத்துக்கள் எப்படி நாசப் படுத்தப் படுகின்றன அதனால் மக்கள் வரிப் பணம் எப்படி வீணடிக்கப்படுகிறது என்பதை வீடியோக்கள் மூலம் மாணவ்ரகளுக்கு விளக்க வேண்டும். சாதி மத கலவரங்களால் மனிதம் எப்படி பாதிக்கப் படுகிறது .மதுவினால் ஏற்படும் பாதிப்புகள், லஞ்ச ஊழல் லாவண்யங்களால் ஏற்படும் விபரீதங்கள் ஆகியவையும் மாணவ்ர்களுக்கு எடுத்து சொல்லப்பட வேண்டும். மேலை நாடுகளில் போக்குவரத்து விதிகள் எவ்வாறு தவறாமல் கடை பிடிக்கப் படுகிறது, மக்கள் எங்கு சென்றாலும் ஒருவரையொருவர் தள்ளிக் கொள்ளாமல் வரிசையில் நின்று எப்படி பயன் பெறுகிறார்கள் போன்றவற்றையும் போதிக்கப்பட வேண்டும். ஏழை எளியவர்களுக்கு உதவுதல் பெண்களிடம் ஒழுக்கமாக நடந்து கொள்ளுதல்,ஊனமுற்றவர்கள் முதியவர்களிடம் எவ்வாறு பண்புடன் நடந்து கொள்ளுதல் இதை போன்று இன்னும் பலவற்றையும் நீதி போதனை வகுப்புகளில் சொல்லி கொடுக்கலாம். மாணவர்களின் ஒரு சத விகிதத்தினராவது இவற்றை உள் வாங்கினால் அடுத்தத் தலை முறையிலாவது நமது தமிழகம் இந்தியாவின் முன் மாதிரி மாநிலமாகத் திகழும் வாய்ப்பினை பெறும்.


வியாழன், 23 ஏப்ரல், 2015

பிச்சைகாரர்... சிறுகதை

அன்று திங்கட் கிழமை
கலெக்டரிடம் மனு கொடுக்க நீண்ட வரிசை நின்றிருந்தது.
ஒரு கிழவர் தடுமாறியபடியே நின்று கொண்டிருந்தார்.

கலெக்டர் அவரை அருகில் அழைத்தார்.

"பெரியவரே உங்களுக்கு என்ன வேண்டும்"

"அய்யா எனக்கு ஒரு சர்ட்பிகேட் வேணும். ரெண்டு வருஷமா அலையிறேன். இன்னும் கெடைக்கலை"

"என்ன சர்டிபிகேட்  பெரியவரே"

"அய்யா எங்க ஊரில் ஒரு தர்ம ஸ்தாபனம் இருக்கு.அவுங்க பிச்சை எடுத்து ஜீவனம் செய்றவங்களுக்கு உதவி செய்ராங்க. எனக்கு பிச்சை எடுத்துதான் ஜீவனம் செய்றேன்னு ஒரு சர்டிபிகேட் வேணும் அவ்வளவுதான்"

உடனே கலெக்டர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை ஏவ, எல்லோரும் பர பரவென அந்த கிழவரிடம் ஓடி வந்து, ஏதோ விசாரணை செய்து விட்டு, அரை மணி நேரத்தில் சர்டிபிகேட்டோட ஓடி வந்து கலெக்டரிடம் கொடுத்தார்கள்.

கலெக்டர் உடனே அந்த கிழவரை அழைத்தார்.

"இதோ உங்கள் சர்டிபிகேட் வாங்கிக் கொள்ளுங்கள்"

கிழவர் சொன்னார்

"அய்யா மன்னிக்கணும் இந்த சர்டிபிகேட்ல என் பெயருக்கு பதிலா அதோ அந்த வெள்ள பேண்ட் போட்டுட்டு இருக்காரே அந்த ஆபிசர் அவர் பேரை போட்டு கொடுத்துடுங்க. அவர்தான் என்னை விட அதிக கஷ்டத்தில இருக்கார், எங்கிட்டய இருபத்தஞ்சு ரூபா கொடுத்தா தான் சர்டிபிகேட் கொடுப்பேன்னு ரெண்டு வருஷமா சொல்லிகிட்டிருந்தார் பாவம்"

சொல்லிக் கொண்டே கிழவர் அங்கிருந்து நகர, கலெக்டர் முதல் அத்தனை ஆபிசர்களும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.