ஞாயிறு, 22 மே, 2016

தேர்தலுக்குப் பின்.... ஒரு ஜோதிட கணிப்பு
தேர்தலின்போதுபல கருத்து கணிப்புகளும் ஜோதிட முன்னறிவிப்புகளும் வெளியிடப்படுவதை நாம் கண்டிருக்கிறோம். ஆனால் தேர்தலுக்கு பின் இவ்வாறான கணிப்புகள் எதுவும் வெளியிடப்படுவதில்லை. இக்குறையை நீக்க நமது ஜோதிட ரத்னா ஜோதிட சாகரம் ஜோல்னாபை மணி அவர்கள் சில கணிப்புகளை இங்கு தந்திருக்கிறார். அவற்றை பார்ப்போமா?

1) நீதி காரகனான குரு டெல்லியிலிருந்து சென்னையை கோணல்மாணலாக உற்று நோக்குவதால், குன்ஹாவின் தீர்ப்பு  தவறென்றும் குளறுபடிகள் இருந்தாலும் குமாரசாமியின் தீர்ப்பே சரியானதென்றும் தெரியவரும். இதனால் தமிழகமெங்கும் அம்மன் பஜனைகள் அதிகமாகும்.

2)சகோதரகாரகன் செவ்வாய் மதுரையிலிருந்து சிவந்த கண்களால் வெறித்து பார்ப்பதால் கோபாலபுரத்தில் சகோதர சண்டைக்கான சமிக்ஞை தெரிகிறது. இதனால் தந்தைக்கும் தளபதிக்கும் பல சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

3)பகை கிரகங்களான குருவும் சந்திரனும் ஒரே வீட்டில் சஞ்சரிப்பதாலும், இந்தத் தேர்தலில் சூரியன் நீச்சம் அடைந்துவிட்டதாலும் பச்சை முண்டாசுகாரர் உதவியுடன் தளபதியார் மீது பல வழக்குகள் தொடரப்படக்கூடும். இதுவரை வீதி வீதியாக அலைந்தவர் கோர்ட் கோர்ட்டாக அலைய வேண்டிய நிலை வரும். பகைவர் வீட்டில் இருந்தாலும் ஜன்ம லக்னத்திற்கு உதவியாக இருந்ததால் பம்பரகாரக அதிபதியான பச்சை முண்டாசுகாரர் அம்மன் அருளால் பார்லிமெண்ட் உறுப்பினராகக் கூடும்.

4) நீசமடைந்த 6 கிரகங்கள் ஒரே வீட்டில் தொடர்ந்து நீடிப்பதால்  உள்ளாட்சி தேர்தலின்போது  இந்த கிரகாதிபதிகள் ஒன்றோடு ஒன்று மோதி உன்னாலே நான் கெட்டேன் என்னாலே நீ கெட்டாய்  என்று பிரிந்து செல்லும். எதுவும் இல்லாதிருந்த 5 கிரகங்கள் அடுத்த வீடுகளை நோக்கி படையெடுக்க, இடுப்பாடையுடன் இருந்த முரசாதிபதி மட்டும் அதனையும் இழந்து நிர்வாணமாய் நிற்க நேரிடும்.

5) வைத்திய கிரகமான கேது தைலாபுரத் தோட்டத்தை ஏழாம் பார்வையால் நோக்குவதால் , அழுகிப்போன மாம்பழங்கள் நீச்சம் அடைந்த சூரியன் மீது சேற்றை வாரி இறைத்து இலைகளுக்குள் சங்கமிக்க முயற்சிக்கும். உச்சம் அடைந்த வீட்டில் இருக்கும் இலைகள் அதற்கு இடம் கொடுக்காது.

6) நீர் கிரகமான சந்திரன் மேல் கோபம்கொண்டு வாக்களித்த சென்னை வாசிகள் மாநகராட்சி தேர்தலின்போது பல இன்னல்களுக்கு ஆளாக்கப்படுவார்கள். வாக்களிக்க சென்றால் சட்டை கிழிந்து மண்டை உடைந்துதான் திரும்ப வேண்டியிருக்கும். எனவே அவர்கள் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.

பொது பலன் அடுத்த ஐந்து ஆண்டுகள் தமிழகம் அம்மன் மயமாகும். காலில் விழுந்து வணங்குதல் ஹெலிகாப்டரை வணங்குதல் சாலையில் விழுந்து வணங்குதல் போன்ற ஆன்மீக காரியங்கள் அதிகமாகும். பங்கு சந்தையில் வாக்காளரின் விலை அதிகரிக்கும். உள்ளாட்சி தேர்தலின் போது இரண்டு மடங்காக உயரும் அதன் விலை நாடாளுமன்ற தேர்தலின் போது பல மடங்கு அதிகரிக்கும். சட்ட சபை மேஜைகள் தட்டித் தட்டியே உடைக்கப்படும். வெளி நடப்பு செய்து செய்து எதிர் கட்சியின் செருப்புகள் அறுந்து போகும்.