புதன், 2 பிப்ரவரி, 2011

சீமானுக்கு சில கேள்விகள்


கருணாநிதியின் மீது உங்கள் கோபம் நியாயமானதே.அதற்காக ஜெயலலிதாவை நீங்கள் ஆதரிப்பது சரியாகுமா? ஜெயலலிதா எப்போழுதுமே விடுதலை புலிகளுக்கும் தமிழ் ஈழத்திற்கும் எதிரானவராக தன்னை அறிவித்துக் கொண்டவர்.பிரபாகரனை கைது செய்து இந்தியாவிற்கு கொண்டு வந்து தண்டிக்க வேண்டுமென்று சட்டசபையிலே தீர்மானம் கொண்டுவந்தவர். போர் என்றால் சாதாரண மக்கள் சாவதை தடுக்க முடியாது என்று கூறியவர்.இலங்கையின் இறையாண்மையை காப்பற்ற வேண்டுமென்று அறிவித்தவர்.விடுதலை புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து என்று கூறித் தான் இன்று வரை சிறப்பு பாதுகாப்பு படையைப் பெற்றுக்கொண்டவர். தமிழ்செல்வன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தார் என்பதற்காக கருணாநிதியை டிஸ்மிஸ் செய்யக் கோரியவர். ஈழத்திற்கு ஆதரவாகப் பேசியதற்காக வைகோவை தடாவில் உள்ளே தள்ளியவர்.நளினியை பொதுமன்னிப்பு அளிக்கலாம் என்று சொன்னதற்காக சோனியாவை கேவலமாக விமர்சித்தவர்.போர் நடந்தபோது அவர் முதலமைச்சராகவோ காங்கிரஸுடன் கூட்டணியாகவோ இருந்திருந்தால் விடுதலை புலிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருப்பார் என்பது நிச்சயம். இப்படி பட்டவருடன் கூட்டணி சேர்ந்து ஈழத் தமிழர்களுக்கு உதவப் போகிறீர்களா? கேட்டால் துரோகிகளைவிட எதிரிகள் மேல் என்று கூறுகிறீர்கள். கருணாவை விட ராஜபக்க்ஷே பரவாயில்லை என்று கை குலுக்குவீர்களா?

இப்போது வேறு வழியின்றி பேயுடன்(அதிமுக) கூட்டணி சேர்ந்திருக்கிறோம். அவர் காங்கிரஸ் பக்கம் போனால் பிசாசுடன்(திமுக) கூட்டணி சேர்கின்ற நிலை ஏற்ப்படலாம் என்று அறிவிக்கிறீர்கள்.மனிதர்களுடன் நீங்கள் எப்போது கூட்டு சேரப் போகிறீர்கள்? சோ ராமசாமி, சுப்ரமணிய சாமி போன்றவர்களுடன் ஒரே மேடையில் அமர்ந்து ஈழத்தை காப்பற்றப் போகிறீர்களா? கருணாநிதி, டாக்டர் ராமதாஸ்,வைகோ, திருமாவளவன் அடுத்து நீங்களா? முன்பே புண்பட்டு போயிருக்கும் ஒரு இனத்தை தொடர்ந்து ஏன் இப்படி எல்லோரும் ஏமாற்றுகிறீர்கள்?ஈழத்தின் மீது உண்மையில் அக்கரை இருக்குமானால், அக்கரை உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து, பெரியார் போல் அரசியல் சார்பில்லாத ஒரு இயக்கத்தை ஆரம்பித்து, தமிழ் நாட்டு மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். ஒரு சில எம் எல் ஏ சீட்டுகளைப் பெற்று நீங்கள் என்ன சாதிக்கப் போகிறீர்கள்? அரசியலில் நுழைந்துவிட்டால் எல்லாவற்றையும் அட்ஜஸ்ட் செய்ய வேண்டுமென்பது உங்களுக்குத் தெரியாதா? போதும் ஈழ மக்களைத் தொடர்ந்து ஏமாற்றுவதை நிறுத்துங்கள்!