சனி, 18 பிப்ரவரி, 2017

சீமை கருவேல மரங்களும் யதார்த்தமில்லாதத் தீர்ப்பும்


போதும் போதுமென்ற அளவிற்கு அரசியல் பேசி தீர்த்தாகிவிட்டது. சசிகலா முதல்வராகி நடராஜன் துணை முதல்வரானாலும் அது திமுகவை விட பெட்டர் என ஒரு சாராரும்அதிமுகவைவிட பெட்டர் என வேறு ஒரு சாராரும் கருதுவதால் அனைவரும் அவர்களை ஏற்றுகொள்ளத் தயாராகிவிட்டார்கள் எனத் தெரிகிறது. நமக்கு மட்டும் ஏன் பொல்லாப்பு..அவர்கள் கொடுக்கப் போகும் விலையில்லா செல் போனை வாங்கிக்கொண்டு சின்னம்மாவிற்கு ஜே போட்டுவிட்டு போவோம். 

இப்பொழுது நான் பேச வந்த விஷயமே வேறு மதுரை உயர் நீதி மன்றக் கிளை சென்ற வாரம் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறது. நிலத்தடி நீர் குறைவிற்கு காரணமாய் இருக்கும் தமிழகத்தில் உள்ள  சீமை கருவேல மரங்களை  வரும் பிப்ரவ்ரி25 ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என தமிழக அரசிற்கு உத்தரவு அளிக்கப்பட்டிருக்கிறது. தமிழக நிர்வாகம் உடனே செயலில் இறங்கி சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியில் இறங்கி பொது மக்களுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. "தங்கள் நிலத்தில் உள்ள மரங்களை அவர்களாகவே அகற்ற வேண்டும். இல்லை எனில் அரசு அதனை அகற்றி விட்டு அதற்கான செலவுத் தொகையையும் அபராதத் தொகையினையும் அவர்களிடமிருந்து வசூலிக்கும்".

அந்த கால மன்னர்கள் அரண்மனையில் இருந்து கொண்டு அமைச்சர்களை விசாரிப்பார்களாம் மாதம் மும்மாரி பொழிகிறதா என்று. அதைப் போலவே எதார்த்ததை அறியாமல் இந்தத் தீர்ப்பும் அதன் தொடர் நடவடிக்கைகளும் அமைந்துள்ளன. இந்தத் தீர்ப்பு குறித்து பாமரராகிய நமக்கு பல ஐயங்கள் எழுகின்றது.

ஏறத் தாழ  40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகம் முழுவதும் இந்த மரங்கள் பரவி கிடக்கின்றன. இவ்வளவு காலங்கள் இல்லாமல் இம் மரங்களினால்தான் நிலத்தடி நீர் குறைந்து வருவதாக எப்படி கண்டறியப்பட்டது. ஏதேனும் அறிவியல் ஆய்வு நடத்தப்பட்டதா?  ஒரு ஏக்கரில் இந்த மரங்கள் இருந்தால் அந்தப்பகுதியில் நீர் வளம் எத்தனை ஆண்டுகளில்பாதிக்கப்படும் என புள்ளி விபரங்கள் எடுக்கப்பட்டதா?

40 ஆண்டுகளில் ஏரி குளம் ஆறுகள் இவற்றின் மீது கட்டிடங்கள் கட்டப்பட்டதால் நிலத்தடி நீருக்கு எந்த பாதிப்பும் இல்லையா? அப்படி பாதிப்பு இருக்குமாயின் ஏன் அந்தக் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு நீர் ஆதாரங்கள் காப்பாற்றப் படவில்லை?

ஒரு மாத கால அவகாசத்தில் தமிழகத்தில் உள்ள அத்தனை சீமை கருவேல மரங்களை அகற்றுவது சாத்தியம்தானா? புறம்போக்கில் உள்ள மரங்களை அகற்றவே ஒரு வருடத்திற்கு மேலாகாதா?

சீமை கருவேல மரங்களை பொது மக்கள் தாங்களாக விரும்பி வளர்க்கவில்லை. அரசுதான் பல ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விறகு ப ஞ்சத்தைத் தீர்க்க ஹெலிகாப்டர் மூலம் தமிழகம் முழுவதும் தூவி வளர செய்தது.ஆனால் அதனை மக்கள் தாங்களாகவே  அகற்ற வேண்டும் என்றும் தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்பது என்ன நியாயம்?நீர் வளத்தை பாதுகாக்க  அரசுதானே அந்த செலவினை ஏற்க வேண்டும்? ஏற்கனவே வறட்சியினால் அவதிப்பட்டு நிவாரணத்தை எதிர் நோக்கி இருக்கும் விவசாயிகள் இந்தப் பணியினை எப்படி மேற்கொள்ள முடியும்? நீர் ஆதாரங்களை பல வகையிலும் வீணடிக்கும் சமூக விரோதிகளை எல்லாம் விட்டுவிட்டு தொடர்ந்து ஏழை கிராமப் புற மக்கள் மீதும்விவசாயிகளையும் தண்டிப்பது ஏன்?

ஆனால் இவற்றை எல்லாம் அரசின் கவனத்திற்கோ நீதி மன்றத்தின் கவனத்திற்கோ எடுத்து செல்ல நம்முடைய அரசியல்வாதிகளுக்கும் நேரம் கிடையாது.ஆனால் நம்முடைய விவசாய சங்கங்கள் ஏன் இதனை கண்டுகொள்ளவில்லை எனத் தெரியவில்லை.  

விவசாயிகள் மீதும் அப்பாவி கிராம மக்கள் மீதும் தொடர்ந்து நடத்தப்படும் இது போன்றத் தாக்குதல்கள் என்றைக்கு நிறுத்தப்படுகிறதோ அன்றக்குத்தான் இந்த நாடு உருப்படும்!