திங்கள், 31 ஜூலை, 2017

கருவேல மரங்களும் திருத்தப் பட்டத் தீர்ப்பும்





மதுரை உயர் நீதி மன்றம்,  நிலத்தடி நீரை பாதிப்பதால் சீமை கருவேல மரங்களை முற்றிலுமாய் அகற்ற வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்பு ஒரு தீர்ப்பு வழங்கியது. அப்பொழுது " சீமை கருவேல மரங்களும் யதார்த்தமில்லாதத் தீர்ப்பும்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எனது வலை பக்கத்தில் எழுதி அதனை முக நூலிலும் பகிர்ந்திருந்தேன்.

அந்தக் கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன். " அந்த கால மன்னர்கள் அரண்மனையில் இருந்து கொண்டு அமைச்சர்களை விசாரிப்பார்களாம் மாதம் மும்மாரி பொழிகிறதா என்று. அதைப் போலவே எதார்த்ததை அறியாமல் இந்தத் தீர்ப்பும் அதன் தொடர் நடவடிக்கைகளும் அமைந்துள்ளன. இந்தத் தீர்ப்பு குறித்து பாமரராகிய நமக்கு பல ஐயங்கள் எழுகின்றது.

ஏறத் தாழ  40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகம் முழுவதும் இந்த மரங்கள் பரவி கிடக்கின்றன. இவ்வளவு காலங்கள் இல்லாமல் இம் மரங்களினால்தான் நிலத்தடி நீர் குறைந்து வருவதாக எப்படி கண்டறியப்பட்டது. ஏதேனும் அறிவியல் ஆய்வு நடத்தப்பட்டதா?  ஒரு ஏக்கரில் இந்த மரங்கள் இருந்தால் அந்தப்பகுதியில் நீர் வளம் எத்தனை ஆண்டுகளில்பாதிக்கப்படும் என புள்ளி விபரங்கள் எடுக்கப்பட்டதா?

ஒரு மாத கால அவகாசத்தில் தமிழகத்தில் உள்ள அத்தனை சீமை கருவேல மரங்களை அகற்றுவது சாத்தியம்தானா? புறம்போக்கில் உள்ள மரங்களை அகற்றவே ஒரு வருடத்திற்கு மேலாகாதா?"

இதற்கிடையே கருவேல மரங்கள் வெட்டப்படுவதால் மாநிலத்தின் சில பகுதிகளில் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படைவதால் இவ்வாறு வெட்டுவதற்குத் தடை கோரி ஒருவர் உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சீமை கருவேல மரங்களினால் நிலத்தடினீர் ஆதாரம் பாதிப்படைகிறதா என கண்டறிய உயர் வனத்துறை அலுவலரின்(வனத்துறை முதன்மை பாதுகாவலர்) தலைமையின் கீழ் ஒரு குழுவை நியமித்தது. அந்தக் குழு  கடந்த 29.07.17 அன்று தனது விசாரணை அறிக்கையினை நீதி மன்றத்தில் சமர்ப்பித்தது.

நிபுணர் குழுவின் பரிந்துரை. 

(நீர் நிலைகளில் உள்ள கருவேல மர்ங்களை மட்டு மல்ல எந்த மரங்களாயிருந்தாலும் வெட்டப்பட வேண்டும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே)

இப்பரிந்துரையின்   அடிப்படையில் நீதி மன்றம் இவ்வாறானத் தீர்ப்பை வழங்கியுள்ளது.




உரிய ஆய்வு செய்யப்படாமல் கருவேல மரங்களை வெட்டுவது ஏன் என் நான் கேள்வி எழுப்பியபோது, எனது வலை பக்கத்தில் கடுமையான கண்டன்ங்கள் வந்தது. ஏதோ கருவேல மரங்களினால்தான் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் வந்துவிட்டதுபோல் அதை வெட்டியே தீர வேண்டும் என பலரும் தெரிவித்தனர். இன்று உயர் நீதி மன்றம் ஒரு சரியானத் தீர்வை வழங்கியிருக்கிறது.



நம்முடைய தமிழகத்தில் அரசியவாதிகளாயிருந்தாலும், அதிகாரிகளாய் இருந்தாலும் , நீதி மன்றங்களாய் இருந்தாலும், பொது மக்களாயிருந்தாலும் எல்லோரும் வெறும் உணர்ச்சிகளின் அடிப்படையிலேயே முடிவுகளை எடுக்கிறார்கள். அறிவுப் பூர்வமான அறிவியல் பூர்வமான முடிவுகள் எடுக்கப்படும்பொழுது மட்டுமே நாடு முன்னேறும்!




புதன், 1 மார்ச், 2017

தேவை அடிப்படை அரசியல் மாற்றங்கள்



பிஜேபியின் உறுப்பினரான திரு வருண் காந்தி, எம் எல் ஏ மற்றும் எம் பிக்களைத் திரும்ப அழைப்பதற்கான சட்டம் இயற்றக் கோரி தனி நபர் மசோத ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார். இவ்வாறான ஒரு சட்டம் இய்ற்றுவது எவ்வளவு தூரம் சாத்தியப்படும் எனத் தெரியவில்லை. ஆனால் நமது அரசியல் சட்டத்தில் அடிப்படையான சில மாற்ற்ங்களை செய்ய வேண்டியது காலத்தின் கட்டயமாகிறது. நம்முடைய சட்டம் அரசியல்வாதிகளில் 80% யோக்கியர்களாயிருந்த போது வடிவமைக்கப்பட்டது. ஆனால் தற்போதைய நிலைமை அப்படியில்லை. எனவேதான் கீழ் கண்ட மாற்றங்களை கொண்டுவர அரசுத் தீவிரமாகப் பரீசிலனை செய்ய வேண்டும்.

1. தேர்தல்கள் 4 ஆண்டிற்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும்.

2. ஒரு உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டு ஓராண்டிற்குள் மரணமடைந்தாலோ       அல்லது பதவி விலகினாலோ மட்டுமே இடைத் தேர்தல் நடத்தப்பட        வேண்டும். ஓராண்டிற்கு மேலாகிவிட்டால் அந்தத் தொகுதியின் பொறுப்பை    பக்கத்துத் தொகுதி உறுப்பினர் வசம் ஒப்படைக்கலாம்.

3. ஒரு நபர் இரண்டு தடவைக்கு மேல் எந்தத் தேர்தலிலும் போட்டியிடக்          கூடாது.

4 ஒருவர் ஏதேனும் ஒரு குற்ற வழக்கில் ஏதேனும் ஒரு நீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்டால் அவர் மேல்முறையீடுகளில் நிரபராதி என விடுவிக்கப்படும் வரை எந்தத் தேர்தலிலும் போட்டியிட அனுமதிக்கக் கூடாது.

5. அங்கிகரீக்கப்பட்ட தேசிய கட்சிகள் மொத்தமுள்ள நாடாளுமன்றத் தொகுதிகளில் 75% தொகுதிகளில் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தியாக வேண்டும். அதே போலவே மா நில கட்சிகள்  75% சட்ட மன்றத் தொகுதிகளில் போட்டியிட்டாக வேண்டும்.

6. சட்ட மன்றம் அல்லது நாடாளுமன்றம் ஆகியவற்றில் உறுப்பினராக இல்லாதவர்கள் அமைச்சர்களாகவோ முதல்வராகவோ பிரதமராகவோ அல்லது வேறு பதவியிலோ அமர்த்தப்படக் கூடாது.

7. உறுப்பினர்களின் தேர்வுத் தொடர்பாக குறித்து வழக்குகள் எதேனும் வருமாயின் அந்த வழக்குகளை உச்ச நீதி மன்றத்தில் சிறப்பு நீதி மன்றம் அமைத்து இரு மாதங்களில் தீர்ப்பு வழங்கப் பட வேண்டும். மேல் முறையீடுகள் அனுமதிக்கப்படக் கூடாது. வழக்கு முடியும் வரை  அந்த உறுப்பினரின் நடவடிக்கைகளைத் தடை செய்ய வேண்டும். மன்ற நடவடிக்கைகளில் வாக்களிக்கவும் அனுமதிக்கக் கூடாது.

8.ஒன்றுக்கும் உதவாத ஆளுனர் பதவியை அகற்ற வேண்டும். அசாதரண சூழ் நிலைகளில்  அந்தந்த மா நில உயர் நீதி மன்ற தலைமை நீதிபதியை குடியரசுத் தலைவரின் பிரதி நிதியாக நியமித்து  பிரச்சனைகளத் தீர்க்கலாம். 

9. நாடாளு மன்றம் மற்றும் சட்ட மன்ற நடவடிக்கைகளை முடக்குகின்ற உறுப்பினர்களை உடன் பதவி நீக்கம் செய்வதுடன் அவர்கள் அடுத்த பத்தாண்டிற்குத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது. 

10. ஒரு முறை போட்டியிட்டு 5% குறைவாக  வாக்கு பெறுபவர்களை அடுத்த இரண்டுத் தேர்தல்களில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது.

இது போன்ற இன்னும் பல மாற்றங்களை பொது மக்களிடமிருந்துப் பெற்று அவற்றை நடைமுறைபடுத்த வேண்டும்

சனி, 18 பிப்ரவரி, 2017

சீமை கருவேல மரங்களும் யதார்த்தமில்லாதத் தீர்ப்பும்






போதும் போதுமென்ற அளவிற்கு அரசியல் பேசி தீர்த்தாகிவிட்டது. சசிகலா முதல்வராகி நடராஜன் துணை முதல்வரானாலும் அது திமுகவை விட பெட்டர் என ஒரு சாராரும்அதிமுகவைவிட பெட்டர் என வேறு ஒரு சாராரும் கருதுவதால் அனைவரும் அவர்களை ஏற்றுகொள்ளத் தயாராகிவிட்டார்கள் எனத் தெரிகிறது. நமக்கு மட்டும் ஏன் பொல்லாப்பு..அவர்கள் கொடுக்கப் போகும் விலையில்லா செல் போனை வாங்கிக்கொண்டு சின்னம்மாவிற்கு ஜே போட்டுவிட்டு போவோம். 

இப்பொழுது நான் பேச வந்த விஷயமே வேறு மதுரை உயர் நீதி மன்றக் கிளை சென்ற வாரம் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறது. நிலத்தடி நீர் குறைவிற்கு காரணமாய் இருக்கும் தமிழகத்தில் உள்ள  சீமை கருவேல மரங்களை  வரும் பிப்ரவ்ரி25 ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என தமிழக அரசிற்கு உத்தரவு அளிக்கப்பட்டிருக்கிறது. தமிழக நிர்வாகம் உடனே செயலில் இறங்கி சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியில் இறங்கி பொது மக்களுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. "தங்கள் நிலத்தில் உள்ள மரங்களை அவர்களாகவே அகற்ற வேண்டும். இல்லை எனில் அரசு அதனை அகற்றி விட்டு அதற்கான செலவுத் தொகையையும் அபராதத் தொகையினையும் அவர்களிடமிருந்து வசூலிக்கும்".

அந்த கால மன்னர்கள் அரண்மனையில் இருந்து கொண்டு அமைச்சர்களை விசாரிப்பார்களாம் மாதம் மும்மாரி பொழிகிறதா என்று. அதைப் போலவே எதார்த்ததை அறியாமல் இந்தத் தீர்ப்பும் அதன் தொடர் நடவடிக்கைகளும் அமைந்துள்ளன. இந்தத் தீர்ப்பு குறித்து பாமரராகிய நமக்கு பல ஐயங்கள் எழுகின்றது.

ஏறத் தாழ  40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகம் முழுவதும் இந்த மரங்கள் பரவி கிடக்கின்றன. இவ்வளவு காலங்கள் இல்லாமல் இம் மரங்களினால்தான் நிலத்தடி நீர் குறைந்து வருவதாக எப்படி கண்டறியப்பட்டது. ஏதேனும் அறிவியல் ஆய்வு நடத்தப்பட்டதா?  ஒரு ஏக்கரில் இந்த மரங்கள் இருந்தால் அந்தப்பகுதியில் நீர் வளம் எத்தனை ஆண்டுகளில்பாதிக்கப்படும் என புள்ளி விபரங்கள் எடுக்கப்பட்டதா?

40 ஆண்டுகளில் ஏரி குளம் ஆறுகள் இவற்றின் மீது கட்டிடங்கள் கட்டப்பட்டதால் நிலத்தடி நீருக்கு எந்த பாதிப்பும் இல்லையா? அப்படி பாதிப்பு இருக்குமாயின் ஏன் அந்தக் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு நீர் ஆதாரங்கள் காப்பாற்றப் படவில்லை?

ஒரு மாத கால அவகாசத்தில் தமிழகத்தில் உள்ள அத்தனை சீமை கருவேல மரங்களை அகற்றுவது சாத்தியம்தானா? புறம்போக்கில் உள்ள மரங்களை அகற்றவே ஒரு வருடத்திற்கு மேலாகாதா?

சீமை கருவேல மரங்களை பொது மக்கள் தாங்களாக விரும்பி வளர்க்கவில்லை. அரசுதான் பல ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விறகு ப ஞ்சத்தைத் தீர்க்க ஹெலிகாப்டர் மூலம் தமிழகம் முழுவதும் தூவி வளர செய்தது.ஆனால் அதனை மக்கள் தாங்களாகவே  அகற்ற வேண்டும் என்றும் தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்பது என்ன நியாயம்?நீர் வளத்தை பாதுகாக்க  அரசுதானே அந்த செலவினை ஏற்க வேண்டும்? ஏற்கனவே வறட்சியினால் அவதிப்பட்டு நிவாரணத்தை எதிர் நோக்கி இருக்கும் விவசாயிகள் இந்தப் பணியினை எப்படி மேற்கொள்ள முடியும்? நீர் ஆதாரங்களை பல வகையிலும் வீணடிக்கும் சமூக விரோதிகளை எல்லாம் விட்டுவிட்டு தொடர்ந்து ஏழை கிராமப் புற மக்கள் மீதும்விவசாயிகளையும் தண்டிப்பது ஏன்?

ஆனால் இவற்றை எல்லாம் அரசின் கவனத்திற்கோ நீதி மன்றத்தின் கவனத்திற்கோ எடுத்து செல்ல நம்முடைய அரசியல்வாதிகளுக்கும் நேரம் கிடையாது.ஆனால் நம்முடைய விவசாய சங்கங்கள் ஏன் இதனை கண்டுகொள்ளவில்லை எனத் தெரியவில்லை.  

விவசாயிகள் மீதும் அப்பாவி கிராம மக்கள் மீதும் தொடர்ந்து நடத்தப்படும் இது போன்றத் தாக்குதல்கள் என்றைக்கு நிறுத்தப்படுகிறதோ அன்றக்குத்தான் இந்த நாடு உருப்படும்!   

ஞாயிறு, 22 மே, 2016

தேர்தலுக்குப் பின்.... ஒரு ஜோதிட கணிப்பு




தேர்தலின்போதுபல கருத்து கணிப்புகளும் ஜோதிட முன்னறிவிப்புகளும் வெளியிடப்படுவதை நாம் கண்டிருக்கிறோம். ஆனால் தேர்தலுக்கு பின் இவ்வாறான கணிப்புகள் எதுவும் வெளியிடப்படுவதில்லை. இக்குறையை நீக்க நமது ஜோதிட ரத்னா ஜோதிட சாகரம் ஜோல்னாபை மணி அவர்கள் சில கணிப்புகளை இங்கு தந்திருக்கிறார். அவற்றை பார்ப்போமா?

1) நீதி காரகனான குரு டெல்லியிலிருந்து சென்னையை கோணல்மாணலாக உற்று நோக்குவதால், குன்ஹாவின் தீர்ப்பு  தவறென்றும் குளறுபடிகள் இருந்தாலும் குமாரசாமியின் தீர்ப்பே சரியானதென்றும் தெரியவரும். இதனால் தமிழகமெங்கும் அம்மன் பஜனைகள் அதிகமாகும்.

2)சகோதரகாரகன் செவ்வாய் மதுரையிலிருந்து சிவந்த கண்களால் வெறித்து பார்ப்பதால் கோபாலபுரத்தில் சகோதர சண்டைக்கான சமிக்ஞை தெரிகிறது. இதனால் தந்தைக்கும் தளபதிக்கும் பல சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

3)பகை கிரகங்களான குருவும் சந்திரனும் ஒரே வீட்டில் சஞ்சரிப்பதாலும், இந்தத் தேர்தலில் சூரியன் நீச்சம் அடைந்துவிட்டதாலும் பச்சை முண்டாசுகாரர் உதவியுடன் தளபதியார் மீது பல வழக்குகள் தொடரப்படக்கூடும். இதுவரை வீதி வீதியாக அலைந்தவர் கோர்ட் கோர்ட்டாக அலைய வேண்டிய நிலை வரும். பகைவர் வீட்டில் இருந்தாலும் ஜன்ம லக்னத்திற்கு உதவியாக இருந்ததால் பம்பரகாரக அதிபதியான பச்சை முண்டாசுகாரர் அம்மன் அருளால் பார்லிமெண்ட் உறுப்பினராகக் கூடும்.

4) நீசமடைந்த 6 கிரகங்கள் ஒரே வீட்டில் தொடர்ந்து நீடிப்பதால்  உள்ளாட்சி தேர்தலின்போது  இந்த கிரகாதிபதிகள் ஒன்றோடு ஒன்று மோதி உன்னாலே நான் கெட்டேன் என்னாலே நீ கெட்டாய்  என்று பிரிந்து செல்லும். எதுவும் இல்லாதிருந்த 5 கிரகங்கள் அடுத்த வீடுகளை நோக்கி படையெடுக்க, இடுப்பாடையுடன் இருந்த முரசாதிபதி மட்டும் அதனையும் இழந்து நிர்வாணமாய் நிற்க நேரிடும்.

5) வைத்திய கிரகமான கேது தைலாபுரத் தோட்டத்தை ஏழாம் பார்வையால் நோக்குவதால் , அழுகிப்போன மாம்பழங்கள் நீச்சம் அடைந்த சூரியன் மீது சேற்றை வாரி இறைத்து இலைகளுக்குள் சங்கமிக்க முயற்சிக்கும். உச்சம் அடைந்த வீட்டில் இருக்கும் இலைகள் அதற்கு இடம் கொடுக்காது.

6) நீர் கிரகமான சந்திரன் மேல் கோபம்கொண்டு வாக்களித்த சென்னை வாசிகள் மாநகராட்சி தேர்தலின்போது பல இன்னல்களுக்கு ஆளாக்கப்படுவார்கள். வாக்களிக்க சென்றால் சட்டை கிழிந்து மண்டை உடைந்துதான் திரும்ப வேண்டியிருக்கும். எனவே அவர்கள் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.

பொது பலன் அடுத்த ஐந்து ஆண்டுகள் தமிழகம் அம்மன் மயமாகும். காலில் விழுந்து வணங்குதல் ஹெலிகாப்டரை வணங்குதல் சாலையில் விழுந்து வணங்குதல் போன்ற ஆன்மீக காரியங்கள் அதிகமாகும். பங்கு சந்தையில் வாக்காளரின் விலை அதிகரிக்கும். உள்ளாட்சி தேர்தலின் போது இரண்டு மடங்காக உயரும் அதன் விலை நாடாளுமன்ற தேர்தலின் போது பல மடங்கு அதிகரிக்கும். சட்ட சபை மேஜைகள் தட்டித் தட்டியே உடைக்கப்படும். வெளி நடப்பு செய்து செய்து எதிர் கட்சியின் செருப்புகள் அறுந்து போகும். 

வியாழன், 2 ஜூலை, 2015

சென்னை மெட்ரோவும் ஹை கோர்ட்டும்



சென்னைக்கு மெட்ரோ  வந்ததன் காரணமாக  சென்னை மக்கள் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் அழகையும் வடிவமைப்பையும் அது செல்லும் வேகத்தையும் பாமர மனிதர்களிலிருந்து பதவியில் உள்ளவர்கள் வரை அத்தனை பேரும் வியந்த வண்ணம் உள்ளனர். இது தொடர்பாக முக நூலிலும் ட்வீட்டரிலும்(தமிழில் என்ன?) இதைப் பற்றியே பேச்சு.இதைப் போலவே சென்னை உயர் நீதி மன்றக் கட்டிடம்  1904 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட பொழுது சென்னை மக்கள் அதன் அழகில் மெய் மறந்து போயிருப்பார்கள் போலிருக்கிறது. அப்பொழுது இப்பொழுது உள்ளது போல ஊடக வசதிகள் இல்லாதக் காரணத்தால் செஞ்சியை சேர்ந்த ஏகாம்பர முதலியார் என்பவர் ஐ கோர்ட்டின் அலங்கார சிந்து என்ற ஒரு கவிதை நூலையே வெளியிட்டிருக்கிறார். 8 பக்கங்களுடைய இந்நூல் லாவணி சிந்து என்று சில கவிதைப் பரிமாணங்களில் எழுதப்பட்டிருக்கிறது. இதனை சென்னை துளசிங்க முதலியார்  அண்டு கம்பெனி என்பவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். அதிலிருந்து ஒருகவிதை

விநாயகர் துதியுடன் ஆரம்பமாகிறது நூல்

அன்னை வயலரந் திருசூழ்ந்து அகிலமெல்லாம் பேறோங்கும்
சென்னை எனும் இன்னகரில் சிறப்புர- உன்னிதமாம்
ஐ கோர்ட்டின் கட்டடத்தை அகிலமிசைப் பாடுதற்கு
கை ஐந்துடைய கணன் காப்பு.

லாவணி
உன்னிதமான சென்னை  ஐ கோர்ட்டை கன்னியே நீ பாறாய்
உற்பனமாகவே அப்புறம் ஓங்கிடும் கற்பனை சீறாய்
சித்தமாகவே மெத்தையடுக்கு மூன்று வைத்து அதை வெகு சீறாய்
சிங்காரமாகவே அங்கங்கே மூலையில் தங்கும் சுழல் படி பாறாய்
இப்படியாக செப்பினால் உனக்கு ஒப்பாதடி மானே
இருக்கும் வினோதங்களை அடுக்காய் உரைத்தால் உனக்கு சேர்க்குமடித் தேனே
மண்டலம் புகழ் நொண்டி சிந்திலே விண்டிடுவேன் கேளாய்
மங்கையே உன் மனம் எங்கும் செல்லாமல் தங்கியே நீ பாறாய்

மீதி கவிதையினை நீங்களே படித்துப் பாருங்கள். தற்பொழுது இப்புத்தகம் Madurai Project தளத்தில் மின் நூலாக கிடைக்கிறது.  ( நன்றி  மதுரை ப்ராஜக்ட்)















செவ்வாய், 30 ஜூன், 2015

தேவை தேர்தல் சீர் திருத்தம்



ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் ஒருவழியாக முடிந்தது எதிர் பார்த்ததுப் போலவே அம்மா அமோக வெற்றிப் பெற்றுவிட்டார். தேவையின்றி ஒரு இடைத் தேர்தல் உருவாக்கப்பட்டு மக்களின் வரிப் பணம் பல கோடி செலவு செய்யப்பட்டு நடத்தப் படும் இம்மாதிரியான இடைத் தேர்தல்கள் தேவையா என்ற என்ணம் எழுகிறது. நம்முடைய தேர்தல் நடை முறைகளில் நிறைய மாற்றங்கள் தேவைப் படுகிறது. 10 பேர் ஒரு தேர்தலில் போட்டியிடும்போது அதில் ஒன்பது பேர் தலா 9% வக்குகள் பெற 10% வாக்குகள் பெறும் கடைசி நபர்  மக்களின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். 90% மக்கள் அவரை எதிர்த்து வாக்களித்திருந்தாலும் அவர்தான் மக்களின் பிரதிநிதி.  இந்த அர்த்த மற்ற முறையை மாற்றி விகிதாச்சாரப் பிரதித்துவ அடிப்படையில் தேர்தல் நடத்தப்படுவதுதான் உண்மையான ஜனநாயகத்திற்கு அழகு.. ஆனால் அந்த மாற்றங்கள் எல்லாம் இந்த நாட்டில் இப்பொழு வரப் போவதில்லை என்பதால் தற்பொழுது நடை முறையில் உள்ள தேர்தல் அமைப்பிலேயே சில மாற்றங்களை கொண்டு வரலாம்.

1) தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர் இரண்டரை ஆண்டுகளுக்குள் இறந்தாலோ அல்லது பதவியைத் துறந்தாலோ இடைதேர்தல் நடத்தப்படலாம். இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டால் அந்தத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்த வேண்டிய அவசியமில்லை.அந்தத் தொகுதிக்கானப் பணிகளை பக்கத்துத் தொகுதி உறுப்பினரின் பொறுப்பில் விடலாம்.(மாவட்ட ஆட்சியர்களே இன்னொரு மாவட்டத்தின் பொறுப்பையும் பார்க்கும் பொழுது இதில் ஒன்றும் தவறில்லை)

2) பதவித் துறப்பு செய்யும் உறுப்பினர்கள் அடுத்தப் பத்தாண்டுகளுக்கு எந்தவொரு தொகுதியிலும் போட்டிப்போட இயலாது என அறிவிக்க வேண்டும்.

3)  வேட்பு மனு தாக்கல் செய்யும் பொழுது கல்விச் சான்றுகளின் அசலையும் இணைத்து அளிக்க வேண்டும். வேட்பு மனு பரீசீலனைக்குப்பிறகு அவற்றைத் திரும்ப அளிக்கலாம். போலியான சான்றுகள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட வேண்டும்.

4) ஒரு வாக்களர் தான் வாக்களிக்கவே இல்லை ஆனால் தனது வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை ஐயத்திற்கு இடமின்றி நிரூபித்துவிட்டால் அந்த வாக்குச் சாவடியில் நடை பெற்ற வாக்குப் பதிவினை செல்லாது என அறிவித்து மறு தேர்தல் நடத்த வேண்டும்.. அச்சாவடியில் பணிபுரிந்த தேர்தல் அலுவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்.

5) சுயேச்சையாகப் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெறும் வேட்பாளரின் வாக்குகளில் ஒரு சதவீதமாவதுப் பெற்றிருக்க வேண்டும். இல்லையென்றால் அதன் பிறகு அவர் எந்த தேர்தலிலும் போட்டியிட இயலாது. (பெரும்பாலும் சுயேச்சைகளை அங்கிகரிக்கப் பட்ட கட்சிகளே பல் வேறு காரணங்களுக்காக நிறுத்துகின்றன.அதில் ஒரு முக்கிய காரணம் சுயேச்சைகளின் பூத் ஏஜண்டுகள் என்ற பெயரில் தங்கள் அடியாட்களை வக்குச்சாவடிக்குள் அதிகப்படுத்துவது.  எனவே சுயேச்சைகளுக்கு பூத் ஏஜண்டுகள் கிடையாது என அறிவிக்க வேண்டும்.

6) தேர்தல் தேதிக்கு ஒரு மாதம் முன்பு மாநிலமாக இருந்தால் கவர்னர் ஆட்சியினையும் நாடாளுமன்றமாக இருந்தால் குடியரசுத்தலைவர் ஆட்சியையும் அமுல் படுத்த வேண்டும்.

இன்னும் இது போல என்ணற்ற சீர் திருத்தங்களை கொண்டு வந்தால் மட்டுமே நேர்மையான ஜன நாயகம் இந்த நாட்டில் சாத்தியம் ஆகும்.

திங்கள், 8 ஜூன், 2015

ஹெல்மெட்டும் ஹை கோர்ட்டும்




அடுத்தமாதம் முதல் தேதியிலிருந்து ஹெல்மெட் அணியாத இரு சக்கர வாகன ஓட்டிகளின் உரிமத்தை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இம்மாதிரியான சட்டங்கள் சட்டத்தை அமுல் படுத்தும் அமைப்பான அரசு முழு மனதோடு செயல்பட்டால் மட்டுமே நிறைவேற்ற இயலும்.இல்லையென்றால் தேவையற்ற லஞ்ச ஊழலுக்கே வழி வகுக்கும்.மேலும் இம்மாதிரியான விஷயங்களில் பிரச்சாரங்கள் மற்றும் தொடர் விளம்பரங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டி அவர்களை நெறி படுத்தலாம்.சட்டமாகும்போது அப்பாவி பொது மக்களில் பலர் குற்றவாளிகளாக ஆக்கப்படுவார்கள். அம்மை நோய்க்கான தடுப்பூசி போலியோவிற்கான சொட்டு மருந்து ஆகியவை விளம்பரங்கள் மூலமே மிகப்பெரும் வெற்றி அடைந்திருக்கிறது என்பதை அனைவரும் அறிவோம். பேரூந்து படிகட்டுகளில் நின்று பயணம் செய்யும் பயணிகளின் உயிர்களுக்கு இதுவரை என்ன உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கிறது? பள்ளி வேன் மற்றும் ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமான மாணவர்களை ஏற்றி சென்று கொண்டிருக்கிறார்களே இவற்றை எல்லாம் தடுக்க சட்டம் இருந்தும் ஏன் அமுல் படுத்த முடியவில்லை? பேரூந்து ஓட்டுனர்களில் சிலர் குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதை எந்த சட்டத்தாலும் தடுக்க முடியவில்லையே?இவற்றை எல்லாம் பற்றி கவலைப் படாத நீதி மன்றங்கள் இரு சக்கர வாகன ஓட்டிகள் மீது மட்டும் அதிக கவனம் செலுத்துவது ஏன்?அவற்றால்தான் அதிக விபத்து ஏற்படுகிறது என்பதாலா?குறைவான விபத்துகள் நடந்தால் பரவாயில்லையா? இவற்றை எல்லாம் சட்டத்தின் மூலம் சரி செய்வதை விட விழிப்புணர்வு முலமே சரி செய்ய இயலும். மக்களை குற்றவாளிகளாக மாற்றும் சட்டங்களை விட ஹெல்மெட் அணியாது வாகனம் ஓட்டும் போது ஏற்படும் விபத்துகளுக்கான இன்ஷுரன்ஸ் தொகையை பாதியாக குறைக்கலாம். ஹெல்மெட்டிற்கான வரிகளை முற்றிலுமாய் நீக்கி எவ்வளவு குறைவான விலையில் கொடுக்க முடியுமோ அவ்வளவு குறைவான விலையில் கிடைக்க செய்யலாம். புதிய இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்படும்போது  இரண்டு ஹெல்மெட்டுகளையும் சேர்த்து அளிக்கப்பட வேண்டும் என சட்டம் கொண்டுவரலாம். டிவி, திரை அரங்குகள் நாளிதழகள் எல்லாவற்றிலும் ஹெல்மெட்டின் அவசியம் குறித்த விளம்பரங்களை தொடர்ந்து வெளி வர செய்யலாம் இதற்கு ரோட்டரி லையன்ஸ் போன்ற அமைப்புகளின் உதவியை நாடலாம். கல்வி நிலையங்களில் இது குறித்து வீடியோக்களின் மூலம் பரப்புரை செய்யலாம்.வெப்ப நாடான நமது நாட்டிற்கு ஏற்ற வகையில் ஹெல்மெட் தயாரிக்க உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அவ்வாறான ஹெல்மெட்டுகளே விற்பனை செய்யப்பட வேண்டும் இது போன்று வழி முறைகளை நடை முறைபடுத்தும்போது மக்கள் விழிப்புணர்வு பெற்று தாங்களாகவே ஹெல்மெட் அணிய முன் வருவார்கள் என்பது நிச்சயம்.