செவ்வாய், 30 ஜூன், 2015

தேவை தேர்தல் சீர் திருத்தம்



ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் ஒருவழியாக முடிந்தது எதிர் பார்த்ததுப் போலவே அம்மா அமோக வெற்றிப் பெற்றுவிட்டார். தேவையின்றி ஒரு இடைத் தேர்தல் உருவாக்கப்பட்டு மக்களின் வரிப் பணம் பல கோடி செலவு செய்யப்பட்டு நடத்தப் படும் இம்மாதிரியான இடைத் தேர்தல்கள் தேவையா என்ற என்ணம் எழுகிறது. நம்முடைய தேர்தல் நடை முறைகளில் நிறைய மாற்றங்கள் தேவைப் படுகிறது. 10 பேர் ஒரு தேர்தலில் போட்டியிடும்போது அதில் ஒன்பது பேர் தலா 9% வக்குகள் பெற 10% வாக்குகள் பெறும் கடைசி நபர்  மக்களின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். 90% மக்கள் அவரை எதிர்த்து வாக்களித்திருந்தாலும் அவர்தான் மக்களின் பிரதிநிதி.  இந்த அர்த்த மற்ற முறையை மாற்றி விகிதாச்சாரப் பிரதித்துவ அடிப்படையில் தேர்தல் நடத்தப்படுவதுதான் உண்மையான ஜனநாயகத்திற்கு அழகு.. ஆனால் அந்த மாற்றங்கள் எல்லாம் இந்த நாட்டில் இப்பொழு வரப் போவதில்லை என்பதால் தற்பொழுது நடை முறையில் உள்ள தேர்தல் அமைப்பிலேயே சில மாற்றங்களை கொண்டு வரலாம்.

1) தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர் இரண்டரை ஆண்டுகளுக்குள் இறந்தாலோ அல்லது பதவியைத் துறந்தாலோ இடைதேர்தல் நடத்தப்படலாம். இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டால் அந்தத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்த வேண்டிய அவசியமில்லை.அந்தத் தொகுதிக்கானப் பணிகளை பக்கத்துத் தொகுதி உறுப்பினரின் பொறுப்பில் விடலாம்.(மாவட்ட ஆட்சியர்களே இன்னொரு மாவட்டத்தின் பொறுப்பையும் பார்க்கும் பொழுது இதில் ஒன்றும் தவறில்லை)

2) பதவித் துறப்பு செய்யும் உறுப்பினர்கள் அடுத்தப் பத்தாண்டுகளுக்கு எந்தவொரு தொகுதியிலும் போட்டிப்போட இயலாது என அறிவிக்க வேண்டும்.

3)  வேட்பு மனு தாக்கல் செய்யும் பொழுது கல்விச் சான்றுகளின் அசலையும் இணைத்து அளிக்க வேண்டும். வேட்பு மனு பரீசீலனைக்குப்பிறகு அவற்றைத் திரும்ப அளிக்கலாம். போலியான சான்றுகள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட வேண்டும்.

4) ஒரு வாக்களர் தான் வாக்களிக்கவே இல்லை ஆனால் தனது வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை ஐயத்திற்கு இடமின்றி நிரூபித்துவிட்டால் அந்த வாக்குச் சாவடியில் நடை பெற்ற வாக்குப் பதிவினை செல்லாது என அறிவித்து மறு தேர்தல் நடத்த வேண்டும்.. அச்சாவடியில் பணிபுரிந்த தேர்தல் அலுவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்.

5) சுயேச்சையாகப் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெறும் வேட்பாளரின் வாக்குகளில் ஒரு சதவீதமாவதுப் பெற்றிருக்க வேண்டும். இல்லையென்றால் அதன் பிறகு அவர் எந்த தேர்தலிலும் போட்டியிட இயலாது. (பெரும்பாலும் சுயேச்சைகளை அங்கிகரிக்கப் பட்ட கட்சிகளே பல் வேறு காரணங்களுக்காக நிறுத்துகின்றன.அதில் ஒரு முக்கிய காரணம் சுயேச்சைகளின் பூத் ஏஜண்டுகள் என்ற பெயரில் தங்கள் அடியாட்களை வக்குச்சாவடிக்குள் அதிகப்படுத்துவது.  எனவே சுயேச்சைகளுக்கு பூத் ஏஜண்டுகள் கிடையாது என அறிவிக்க வேண்டும்.

6) தேர்தல் தேதிக்கு ஒரு மாதம் முன்பு மாநிலமாக இருந்தால் கவர்னர் ஆட்சியினையும் நாடாளுமன்றமாக இருந்தால் குடியரசுத்தலைவர் ஆட்சியையும் அமுல் படுத்த வேண்டும்.

இன்னும் இது போல என்ணற்ற சீர் திருத்தங்களை கொண்டு வந்தால் மட்டுமே நேர்மையான ஜன நாயகம் இந்த நாட்டில் சாத்தியம் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக