திங்கள், 8 ஜூன், 2015

ஹெல்மெட்டும் ஹை கோர்ட்டும்




அடுத்தமாதம் முதல் தேதியிலிருந்து ஹெல்மெட் அணியாத இரு சக்கர வாகன ஓட்டிகளின் உரிமத்தை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இம்மாதிரியான சட்டங்கள் சட்டத்தை அமுல் படுத்தும் அமைப்பான அரசு முழு மனதோடு செயல்பட்டால் மட்டுமே நிறைவேற்ற இயலும்.இல்லையென்றால் தேவையற்ற லஞ்ச ஊழலுக்கே வழி வகுக்கும்.மேலும் இம்மாதிரியான விஷயங்களில் பிரச்சாரங்கள் மற்றும் தொடர் விளம்பரங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டி அவர்களை நெறி படுத்தலாம்.சட்டமாகும்போது அப்பாவி பொது மக்களில் பலர் குற்றவாளிகளாக ஆக்கப்படுவார்கள். அம்மை நோய்க்கான தடுப்பூசி போலியோவிற்கான சொட்டு மருந்து ஆகியவை விளம்பரங்கள் மூலமே மிகப்பெரும் வெற்றி அடைந்திருக்கிறது என்பதை அனைவரும் அறிவோம். பேரூந்து படிகட்டுகளில் நின்று பயணம் செய்யும் பயணிகளின் உயிர்களுக்கு இதுவரை என்ன உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கிறது? பள்ளி வேன் மற்றும் ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமான மாணவர்களை ஏற்றி சென்று கொண்டிருக்கிறார்களே இவற்றை எல்லாம் தடுக்க சட்டம் இருந்தும் ஏன் அமுல் படுத்த முடியவில்லை? பேரூந்து ஓட்டுனர்களில் சிலர் குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதை எந்த சட்டத்தாலும் தடுக்க முடியவில்லையே?இவற்றை எல்லாம் பற்றி கவலைப் படாத நீதி மன்றங்கள் இரு சக்கர வாகன ஓட்டிகள் மீது மட்டும் அதிக கவனம் செலுத்துவது ஏன்?அவற்றால்தான் அதிக விபத்து ஏற்படுகிறது என்பதாலா?குறைவான விபத்துகள் நடந்தால் பரவாயில்லையா? இவற்றை எல்லாம் சட்டத்தின் மூலம் சரி செய்வதை விட விழிப்புணர்வு முலமே சரி செய்ய இயலும். மக்களை குற்றவாளிகளாக மாற்றும் சட்டங்களை விட ஹெல்மெட் அணியாது வாகனம் ஓட்டும் போது ஏற்படும் விபத்துகளுக்கான இன்ஷுரன்ஸ் தொகையை பாதியாக குறைக்கலாம். ஹெல்மெட்டிற்கான வரிகளை முற்றிலுமாய் நீக்கி எவ்வளவு குறைவான விலையில் கொடுக்க முடியுமோ அவ்வளவு குறைவான விலையில் கிடைக்க செய்யலாம். புதிய இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்படும்போது  இரண்டு ஹெல்மெட்டுகளையும் சேர்த்து அளிக்கப்பட வேண்டும் என சட்டம் கொண்டுவரலாம். டிவி, திரை அரங்குகள் நாளிதழகள் எல்லாவற்றிலும் ஹெல்மெட்டின் அவசியம் குறித்த விளம்பரங்களை தொடர்ந்து வெளி வர செய்யலாம் இதற்கு ரோட்டரி லையன்ஸ் போன்ற அமைப்புகளின் உதவியை நாடலாம். கல்வி நிலையங்களில் இது குறித்து வீடியோக்களின் மூலம் பரப்புரை செய்யலாம்.வெப்ப நாடான நமது நாட்டிற்கு ஏற்ற வகையில் ஹெல்மெட் தயாரிக்க உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அவ்வாறான ஹெல்மெட்டுகளே விற்பனை செய்யப்பட வேண்டும் இது போன்று வழி முறைகளை நடை முறைபடுத்தும்போது மக்கள் விழிப்புணர்வு பெற்று தாங்களாகவே ஹெல்மெட் அணிய முன் வருவார்கள் என்பது நிச்சயம்.

2 கருத்துகள்: