வியாழன், 23 ஏப்ரல், 2015

பிச்சைகாரர்... சிறுகதை

அன்று திங்கட் கிழமை
கலெக்டரிடம் மனு கொடுக்க நீண்ட வரிசை நின்றிருந்தது.
ஒரு கிழவர் தடுமாறியபடியே நின்று கொண்டிருந்தார்.

கலெக்டர் அவரை அருகில் அழைத்தார்.

"பெரியவரே உங்களுக்கு என்ன வேண்டும்"

"அய்யா எனக்கு ஒரு சர்ட்பிகேட் வேணும். ரெண்டு வருஷமா அலையிறேன். இன்னும் கெடைக்கலை"

"என்ன சர்டிபிகேட்  பெரியவரே"

"அய்யா எங்க ஊரில் ஒரு தர்ம ஸ்தாபனம் இருக்கு.அவுங்க பிச்சை எடுத்து ஜீவனம் செய்றவங்களுக்கு உதவி செய்ராங்க. எனக்கு பிச்சை எடுத்துதான் ஜீவனம் செய்றேன்னு ஒரு சர்டிபிகேட் வேணும் அவ்வளவுதான்"

உடனே கலெக்டர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை ஏவ, எல்லோரும் பர பரவென அந்த கிழவரிடம் ஓடி வந்து, ஏதோ விசாரணை செய்து விட்டு, அரை மணி நேரத்தில் சர்டிபிகேட்டோட ஓடி வந்து கலெக்டரிடம் கொடுத்தார்கள்.

கலெக்டர் உடனே அந்த கிழவரை அழைத்தார்.

"இதோ உங்கள் சர்டிபிகேட் வாங்கிக் கொள்ளுங்கள்"

கிழவர் சொன்னார்

"அய்யா மன்னிக்கணும் இந்த சர்டிபிகேட்ல என் பெயருக்கு பதிலா அதோ அந்த வெள்ள பேண்ட் போட்டுட்டு இருக்காரே அந்த ஆபிசர் அவர் பேரை போட்டு கொடுத்துடுங்க. அவர்தான் என்னை விட அதிக கஷ்டத்தில இருக்கார், எங்கிட்டய இருபத்தஞ்சு ரூபா கொடுத்தா தான் சர்டிபிகேட் கொடுப்பேன்னு ரெண்டு வருஷமா சொல்லிகிட்டிருந்தார் பாவம்"

சொல்லிக் கொண்டே கிழவர் அங்கிருந்து நகர, கலெக்டர் முதல் அத்தனை ஆபிசர்களும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக