திங்கள், 11 மே, 2015

தமிழகத்தில் வாழ்ந்த சில பைத்தியக்காரர்கள்இளவரசனின் தேர் காலில் விழுந்து இறந்த கன்றின் உரிமையாளனிடம்  "சாலையில் ஏன் கன்றினை அவிழ்த்துவிட்டாய் இவனை சிறையில் அடையுங்கள்" என உத்தரவிடாமல் தன் மகனை தேர் காலில் இட்ட அரைக்க முனைந்தானே மனு நீதி சோழன் அவன் பைத்தியம் அல்லவா?

கண்ணகி இன்னொரு சிலம்பினை கொண்டு வந்து தன் கணவன் குற்றவாளி இல்லை என சொன்னவுடன் "ஆகா இதோ இன்னொரு சிலம்பும் கிடைத்துவிட்டது மனைவியும் கணவனும் கூட்டு களவாணிகள் இவளை சிறையில் அடையுங்கள்" என உத்தரவிடாமல் யானோ அரசன் யானே கள்வன் என உயிர் விட்டானே பாண்டியன் நெடுஞ்செழியன்  அவன் ஒரு பைத்தியகாரன்!

பிழையான பாட்டை கொண்டு வந்தது இறைவன் எனத் தெரிந்ததும்  "என்ன ஒரு அருமையான கவிதை சிவனின் பாடலை இந்த சிறுவன் எடைபோட முடியுமா?" எனப் புகழ்ந்து வேண்டிய வரங்களை பெறுவதை விட்டு நெற்றி கண்ணை காட்டினும் குற்றம் குற்றமே என எரிந்து போனானே நக்கீரன் அவன் ஒரு பைத்தியகாரன்!

முல்லை கொடி தன் தேர் மீது படர்ந்திருப்பதை பார்த்ததும் "தேர் நிலையை சரியாக பராமரிக்காதப் பணியாளர்களை உடன் சஸ்பெண்ட் செய்யுங்கள்" என உத்தரவிடாமல் தனது தேரை அங்கேயே நிறுத்திவிட்டுப் போனானே வள்ளல் பாரி அவன் ஒரு பைத்தியகாரன் அல்லவா?

அடுத்து இவன் தான் ஆட்சிக்கு வருவான் என இளங்கோவடிகளை பார்த்து ஆரூடக்காரன் சொன்னவுடன் "அப்படியா? அப்படியென்றால் ஆக வேண்டியதை கவனியுங்கள்.எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை" என சொல்லாமல் அண்ணனுக்காக ஆட்சியை துறந்தாரே இளங்கோவடிகள் அவர் ஒரு பைத்தியகாரர்!

நீரைத் தேக்கி அதனை பாசனத்திற்கு பயன்படுத்தலாம் என்று அக்காலத்தில் கனவில் கூட யாரும் காணாத சிந்தனையை நனவாக்கி அதற்கு கரிகாலன் அணை எனப் பெயரிடாமல் கல்லணை என்று பெயரிட்ட கரிகால் பெரு வளத்தான் அவன் ஒரு பைத்தியகாரன்!

உலகெங்கும் ஆட்சி செய்த மன்னர்கள் எல்லாம் தங்கள் அரண்மனைகளை இன்றும் உலகம் வியக்கும் வண்ணம் அமைத்து வாழ்ந்திருக்கிறார்களே   ஆனால் நம் தமிழ் மன்னர்கள் என்ன செய்தார்கள் பெரும் பெரும் ஆலயங்களை நிறுவினார்களைத் தவிர தங்கள் அரண்மணைகளை அவ்வாறு எவரும் நிர்மாணிக்கவில்லையே அவர்கள் அத்தனை பேருமே பைத்தியகாரர்களன்றி வேறென்ன சொல்வது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக