வெள்ளி, 8 மே, 2015

சல்மான் வழக்கிற்கும் இதற்கும் தொடர்பில்லை



சமன் செய்து சீர் தூக்கும் அப்படின்னு வள்ளுவர் ஏதோ எழுதி வச்சுட்டு போயிட்டார். நம்ம நாட்டு சட்டத்தை வடிவமைச்சவங்களும் அதையே பின்பற்றி செஞ்சுட்டு போய்ட்டாங்க.ஆனால் இவ்வளவு பெரிய ஜனநாயக நாட்டில அதெல்லாம் சரிபடுமா? அதனால நம்ம  குற்றவியல் சட்டத்தில உடனடியா சில மாற்றங்களை கொண்டு வரணும் முதல்ல ஜனங்களை நாலா பிரிக்கணும்.அய்யயோ வர்ணாஸ்ரம் இல்லிங்க இது வேற மாதிரி. 

முதல்ல A க்ருப். இதில அரசியல் வாதிங்க பெரிய ஆஃபிசருங்க இவங்கள்ளாம் அடங்குவாங்க.இவங்கள்ளாம் என்ன தப்பு செஞ்சாலும் ஒரு FIR கூட போடக் கூடாது. அவங்க தப்புக்கு தகுந்த மாதிரி பத்ம பூஷன் பாரத் ரத்னா போன்ற விருதுகளுக்கு இணையா ஏதேனும் விருது கொடுத்து கௌரவிக்கணும்.

ரெண்டாவது B க்ருப்.இதில பிரபலமான நடிகர்கள் விளையாட்டு வீரர்கள் இவர்கள் எல்லாம் அடங்குவாங்க. இவங்க தப்பு செஞ்சா FIR  போடலாம்.ஆனால் சாட்சி சொல்ல யாரும் வரக் கூடாது. இவங்க தண்ணி அடிச்சுட்டு வண்டி ஓட்டுனா மதுவோட தீமையை விளக்கத்தான் அப்படி செஞ்சாங்கன்னு அரசாங்கமே மக்களுக்கு எடுத்து சொல்லனும். ட்ராபிக்ல யாரையாவது அடிச்சு கொன்னுட்டாக் கூட, சட்டம் ஒழுங்கை காப்பாத்தத்தான் அப்படி செஞ்சாங்கன்னு அவங்களுக்கு பாராட்டு விழா நடத்தி பரிசும் கொடுக்கலாம். இதையெல்லாம் மீறி அவங்களுக்கு தண்டனை கொடுத்துத்தான் ஆகனும்னு ஒரு நிலை வந்துட்டா அந்த தண்டணையை அவங்க சார்பா வேற யாராவது அனுபவிக்கிற மாதிரி சட்டத்தில் மாற்றம் கொண்டு வரணும். அவங்க நடிச்ச படம் வரலைன்னா மக்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை எண்ணி உடனே இந்த சட்ட மாற்றத்தை கொண்டு வரணும். முடிஞ்சா இவங்க மேல  FIR  போட்ட அந்த ஆபிசருக்கு ஆயுள் தண்டனை வழங்கலாம்.

மூணாவது C க்ருப். இதில் எம் எல் ஏ க்கள் கவுன்கிலர்கள் இரண்டாம் நிலை அதிகாரிகள் இவர்கள் அடங்குவார்கள். இவர்கள் மீது FIR  போடலாம்.கைதும் செய்யலாம். ஆனால் விசாரணையை சீக்கிரம் முடிக்கக் கூடாது. மக்கள் பரபரப்பா வேறு விஷயத்தில் ஆழ்ந்திருக்கும்போது இவங்களை ரீலீஸ் பண்ணிடலாம்.இவங்க பெரும்பாலும் தங்கள் மேல் மட்டதின் மீதான விசுவாசத்தை காண்பிக்கத்தான் குற்றங்களில் ஈடுபடுவதால், இவர்கள் விடுதலை ஆனவுடன், எம் எல் ஏவாக இருந்தால் மந்திரியாகவும் கவுன்ஸிலராக இருந்தா எம் எல் ஏ வாகவும் ப்ரமோஷன் கொடுக்கலாம்.

நான்காவது D க்ருப்.இதில் கடை நிலை ஊழியர்கள் நம்மை போன்று அப்பாவி மக்கள் அடங்குவார்கள். இவர்களை அறிவிக்கப்பட்ட குற்றவாளிகள்  எனப் பிரகடனம் செய்யலாம்.ஐம்பது ரூபா லஞ்சம் வாங்குற கீழ் மட்ட அலுவலர்களை சும்மா விடக் கூடாது. அவங்களுக்கு கடுமையான தண்டணை கொடுக்கணும். அவங்க போட்டோவை பேப்பர் டிவியில் எல்லாம் போட்டு அசிங்கபடுத்தணும். அவங்க குடும்பத்தை எவ்வளவு அசிங்க படுத்த முடிமோ அந்த அளவு அசிங்கப்படுத்தனும். தண்ணி வரலைன்னு யாராவது போராட்டம் பண்ணினா அவங்களுக்கு  ஆயுள் தண்டனை கொடுக்கணும். இந்த மக்கள் அது வேணும் இது வேணும்னு ஏதாவது போராட்டம் பண்ணாமல் இருக்க ஒவ்வொரு வாக்களாருக்கும் ஒவ்வொரு வேட்பாளரும் ரூபாய் ஐநூறும் அரசாங்க சார்பா மானியமா ரூபாய் ஐநூறும்  ஒவ்வொரு தேர்தலின் போதும் கொடுக்கனும்னு சட்டத்தில் உடனடியா மாற்றம் கொண்டு வரணும். 

இந்த மாற்றங்களை உடனடியா கொண்டு வந்தா, நம்முடைய ஜனநாயகம் மேலும் வலுபெறும் என்பது நிச்சயம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக