வியாழன், 8 டிசம்பர், 2011

புத்தனை பூஜிக்காதீர்கள்


சிந்தனையை இழந்த சிங்களர்களே

வெற்றிப் பெற்றுவிட்டோம் என இறுமாந்திருக்கும் நீங்கள் , சொந்த நாட்டவர்களை கொல்வதற்காக அன்னிய நாடுகளின் கைகூலிகளாய் மாறிப்போன உங்கள் அரசியல்வாதிகளைப் பற்றி அவமானப்படவில்லையா?

விளைவுகளுக்கெல்லாம் விடுதலைப் புலிகள்தான் காரணமென்னும் விளக்கம் சொல்லும் நீங்கள், அமைதியாய் இருந்த ஒரு இனம் ஆயுதம் தூக்கியது ஏன் என அரை கணம் கூட சிந்திக்க மாட்டீர்களா?

இனத்தை அழிக்க நினைக்கும் நீங்கள், இனத்துரோகிகளுக்கு இடமளிப்பதை இழிவென்று எண்ணவில்லையா?

எண்ணற்ற இனங்கள், எண்னற்ற மொழிகள் , எத்தனையோ வேறுபாடுகள் அத்தனையையும் ஒருங்கிணைத்து எத்தனை நாடுகள் ஏற்றம் பெறுகின்றன- இரண்டே இனம், இரண்டே மொழி , ஒருங்கிணைக்க முடியாத உங்கள் மிருக குணத்தால் , இழிவு பட்டுகொண்டீருக்கிறீர்கள் என்பதை உணர மாட்டீர்களா?

எழில் மிகு இலங்கையாக அறியப்பட்ட நீங்கள் இப்பொழுது அரசு பயங்கரவாதத்தின் அடையாளமாய் மாறிப்போய்விட்டீர்களே- இது உங்களுக்கு அசிங்கமாக இல்லையா?

சொந்த நாட்டில் உரிமைகளை கோரியவர்களை கொன்று குவித்துவிட்டு கும்மாளமிடுவது உங்களுக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தவில்லையா?

சிறார்களையும், மகளிரையும் கூட சிதைத்த மனிதாபிமானமற் உங்கள் ராணுவத்தை பாராட்டி மகிழ்வதுதான் உங்கள் பண்பா?

நீங்கள் அறுத்தப் போட்டதெல்லாம் எம் இனத்தின் வேர்கள் அல்ல. அவை விளவித்த கனிகள். வேர்கள் மீண்டும் முகிழ்க்கும்போது இன்று போல் அன்று நீங்கள் வேடிக்கை பார்க்க முடியாது.

அகிம்சை சொன்ன புத்தனை ஆலயங்களில் வைத்துவிட்டு, ஆட்களை கொல்லும் அரங்கமாக இலங்கையை மாற்றிவிட்ட நீங்கள் இனியாவது புத்தனை பூஜிக்காதீர்கள் அது புத்தனுக்கு இழுக்கு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக