வியாழன், 8 டிசம்பர், 2011

புத்தனை பூஜிக்காதீர்கள்


சிந்தனையை இழந்த சிங்களர்களே

வெற்றிப் பெற்றுவிட்டோம் என இறுமாந்திருக்கும் நீங்கள் , சொந்த நாட்டவர்களை கொல்வதற்காக அன்னிய நாடுகளின் கைகூலிகளாய் மாறிப்போன உங்கள் அரசியல்வாதிகளைப் பற்றி அவமானப்படவில்லையா?

விளைவுகளுக்கெல்லாம் விடுதலைப் புலிகள்தான் காரணமென்னும் விளக்கம் சொல்லும் நீங்கள், அமைதியாய் இருந்த ஒரு இனம் ஆயுதம் தூக்கியது ஏன் என அரை கணம் கூட சிந்திக்க மாட்டீர்களா?

இனத்தை அழிக்க நினைக்கும் நீங்கள், இனத்துரோகிகளுக்கு இடமளிப்பதை இழிவென்று எண்ணவில்லையா?

எண்ணற்ற இனங்கள், எண்னற்ற மொழிகள் , எத்தனையோ வேறுபாடுகள் அத்தனையையும் ஒருங்கிணைத்து எத்தனை நாடுகள் ஏற்றம் பெறுகின்றன- இரண்டே இனம், இரண்டே மொழி , ஒருங்கிணைக்க முடியாத உங்கள் மிருக குணத்தால் , இழிவு பட்டுகொண்டீருக்கிறீர்கள் என்பதை உணர மாட்டீர்களா?

எழில் மிகு இலங்கையாக அறியப்பட்ட நீங்கள் இப்பொழுது அரசு பயங்கரவாதத்தின் அடையாளமாய் மாறிப்போய்விட்டீர்களே- இது உங்களுக்கு அசிங்கமாக இல்லையா?

சொந்த நாட்டில் உரிமைகளை கோரியவர்களை கொன்று குவித்துவிட்டு கும்மாளமிடுவது உங்களுக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தவில்லையா?

சிறார்களையும், மகளிரையும் கூட சிதைத்த மனிதாபிமானமற் உங்கள் ராணுவத்தை பாராட்டி மகிழ்வதுதான் உங்கள் பண்பா?

நீங்கள் அறுத்தப் போட்டதெல்லாம் எம் இனத்தின் வேர்கள் அல்ல. அவை விளவித்த கனிகள். வேர்கள் மீண்டும் முகிழ்க்கும்போது இன்று போல் அன்று நீங்கள் வேடிக்கை பார்க்க முடியாது.

அகிம்சை சொன்ன புத்தனை ஆலயங்களில் வைத்துவிட்டு, ஆட்களை கொல்லும் அரங்கமாக இலங்கையை மாற்றிவிட்ட நீங்கள் இனியாவது புத்தனை பூஜிக்காதீர்கள் அது புத்தனுக்கு இழுக்கு!

வெள்ளி, 8 ஏப்ரல், 2011

தோனி- தன்னிகரற்ற தலைவன்!


இந்திய கிரிக்கெட்டை நீண்ட நாட்களாக கவனித்து வருபவர்களில் நானும் ஒருவன். நவாப் பட்டோடி காலம் முதற்கொண்டு இன்றைய தோனி வரை அனேக கேப்டன்களின் ஆட்டத்திறமையை கண்டு மகிழ்ந்திருக்கிறேன்.

இளம் வயதிலேயே வெஸ்ட் இண்டிசின் புயல் வேக பந்து வீச்சை அச்சமின்றி எதிர் கொண்ட பட்டௌடி, இளம் வயதிலேயே கேப்டன் ஆனார். ஒரு அருமையான பேட்ஸ்மன். அவருடைய காலத்தில் டெஸ்ட் மேட்ச் மட்டுமே விளயாடப்பட்டு வந்தது. அதுவும் அப்பொழுதெல்லாம் கிரிக்கெட்டை ஜெண்ட்ல்மேன் விளையாட்டு என வர்ணித்து வெற்றித் தோல்விகளைப் பற்றி கவலைப் படாமல் விளையாடுவார்கள். அதனால் விளையாட்டில் பெரிய வியூகங்கள் வகுக்க வேண்டிய அவசியம் எல்லாம் அவர்களுக்கு இல்லை.அதனால் கேப்டனின் திறமையைப் பற்றி யாரும் அதிகமாக விவாதிப்பது இல்லை.

பட்டௌடிக்குப் பின் ஒரு சிலர் கேப்டனாக வந்தாலும் அஜித் வடெக்கர் கேப்டனாக இருந்த போதுதான் இந்திய அணி கொஞ்சம் கன்சிஸ்டன்சியாக விளையாட ஆரம்பித்தது. அவருக்குப் பின் சுனில் கவாஸ்கர் கேப்டன் ஆன பிறகுதான் இந்திய அணி ஒரு புத்துணர்வைப் பெற்றது. மிகுந்த திறமையான பேட்ஸ்மேனான கவாஸ்கரை அவுட்டாக்குவது என்பது அன்றைய டீம்களுக்கு மிகப் பெரிய சவாலாகவே இருந்தது. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி இறுதிவரை ஆட்டம் இழக்கமால் ஆடக்கூடிய அற்புதமான பேட்ஸ்மேன் கவாஸ்கர். ஆனால் கேப்டனாக அவரது செயல் பாடுகள் பலத்த விமர்சனங்களுக்கு உள்ளானது. ஒருதலை பட்சமாக நடக்கிறார் என்று குற்றசாட்டு எழுந்தது. வெங்கட் ராகவன் போன்ற திறமையான வீரர்கள் இவரால் ஓரம் கட்டப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இவர் கேப்டனாக இருந்தபோது அணியின் ஒற்றுமை குறைந்து போனது. ஒரு நாள் போட்டிகளில் தனிப்பட்ட முறையிலும் இவர் சரிவர ஆடவில்லை. அறுபது ஓவர் அவுட்டாகாமல் இருந்து வெறும் 36 ரன் எடுத்தது இவருடைய மிகப் பெரிய வீழ்ச்சியாகும்

தனிப்பட்ட முறையில் 10000 ரன் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமை மிகு பேட்ஸ்மேனாக இருந்த போதும் கேப்டனாக இவர் சரிவர செயல்படவில்லை என்பதுதான் உண்மை.. இதைப் போலவே பேடி, வெங்க் சர்க்கார் போன்றவர்கள் திறமையான பௌலர்களாகவும் பேட்ஸ்மேன்களாக இருந்தபோதும் கேப்டனகளாக ஜொலிக்கவில்லை . அதிரடி ஆட்டகாரர் கபில் தேவ் கேப்டனாக இருந்த போது எடுத்த பல தவறான முடிவுகளால் இந்திய அணி பல தோல்விகளை சந்தித்தது. எனினும் ஒரு நாள்1983 உலக கோப்பையை வென்றது அற்புதமான ஒரு நிகழ்வாகும். இதில் கபில் தேவ் பெரும் பங்கு ஆற்றியிருக்கிரார் என்பதும் மறக்க முடியாத உண்மையாகும்.

அஸாருதின் சூதாட்டப் புகாரில் சிக்கியவர் என்பதால் அவரது கேப்டன்சியை இங்கு விமர்சிப்பதே அர்த்தம்ற்றது. சச்சின் டெண்டுல்கர் அவருடைய பதட்டமடையாத் தன்மைக்காக பெரிதும் பாரட்டப்படுபவர். ஆனால் அவர் கேப்டனாக இருந்தபோது மிகுந்த பதட்டத்துடனேதான் காணப்படுவார். இந்த பதட்டமே அவருடைய கேப்டன்சியையும் அவருடைய பேட்டிங்கையயும் வெகுவாக பாதித்தது. அதன் காரணமாகவே கேப்டன்சி பொறுப்பிலிருந்து விலகிகொண்டுவிட்டார். டெண்டுல்கருக்குப் பிறகு கேப்டனான சவ்ரவ் கங்குலி இன்றைய இந்திய அணியின் வெற்றிகளுக்கெல்லாம். அஸ்திவாரமாக அமைந்தவர் என்றால் அது மிகை ஆகாது. வெற்றிப் பெற்றாக வேண்டும் என்ற முனைப்பை இந்திய அணிக்குள் புகுத்தியவர் கங்குலி. எதற்கும் விட்டு கொடுக்காமல் வெற்றி ஒன்றே குறிக்கோளாக விளையாடியவர் கங்குலி. பல வெற்றிகளையும் பெற்று தந்தார். ஆனால் வியூகங்களை வகுப்பதில் மிகுந்த திறமையுடன் செயல் பட்டார் என்று கூற முடியாது.

தோனி கேப்டன் ஆன பின்புதான் இந்திய டீம் ஒரு புதிய திசையையை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது.குழுவுக்குள் ஒற்றுமை, சிறப்பான விளையாட்டு வீயுகங்கள்,பந்து வீச்சாளர்களை சுழற்றும் முறை என அத்தனையயிலும் தனது தனி திறமையை காட்டினார் தோனி. டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20-20 என்று அனைத்திலும் சாதனைகளை படைத்தார் தோனி. 20-20 உலக கோப்பையை வென்றார். டெஸ்ட் குழுக்களில் நம்பெர் ஒன் குழுவாக இந்தியாவை கொண்டு சென்றார். இதோ ஒரு நாள் போட்டிக்கான உலக கோப்பையினையும் வென்று காட்டியிருக்கிறார்.ஆடம்பரமில்லாதப் பேச்சு, எல்லோரையும் அரவணைத்து செல்லும் பாங்கு, இளைஞர்களுக்கு உரிய பங்கு அளித்தல், மூத்த வீரர்களுடன் இணக்கமான அணுகுமுறை என ஒரு கேப்டனுக்குரிய அனைத்திலும் மிக மிக சிறப்பாக செயல் படக்கூடிய கேப்டன் தோனி என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தோனிக்கு நிகரான கேப்டன்ங்கள் எவருமில்லை. அவருடைய கேப்டன்சி நீடிக்கவேண்டும்.இந்திய வெற்றிகள் மேன்மேலும் தொடர வேண்டும் .

புதன், 2 பிப்ரவரி, 2011

சீமானுக்கு சில கேள்விகள்


கருணாநிதியின் மீது உங்கள் கோபம் நியாயமானதே.அதற்காக ஜெயலலிதாவை நீங்கள் ஆதரிப்பது சரியாகுமா? ஜெயலலிதா எப்போழுதுமே விடுதலை புலிகளுக்கும் தமிழ் ஈழத்திற்கும் எதிரானவராக தன்னை அறிவித்துக் கொண்டவர்.பிரபாகரனை கைது செய்து இந்தியாவிற்கு கொண்டு வந்து தண்டிக்க வேண்டுமென்று சட்டசபையிலே தீர்மானம் கொண்டுவந்தவர். போர் என்றால் சாதாரண மக்கள் சாவதை தடுக்க முடியாது என்று கூறியவர்.இலங்கையின் இறையாண்மையை காப்பற்ற வேண்டுமென்று அறிவித்தவர்.விடுதலை புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து என்று கூறித் தான் இன்று வரை சிறப்பு பாதுகாப்பு படையைப் பெற்றுக்கொண்டவர். தமிழ்செல்வன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தார் என்பதற்காக கருணாநிதியை டிஸ்மிஸ் செய்யக் கோரியவர். ஈழத்திற்கு ஆதரவாகப் பேசியதற்காக வைகோவை தடாவில் உள்ளே தள்ளியவர்.நளினியை பொதுமன்னிப்பு அளிக்கலாம் என்று சொன்னதற்காக சோனியாவை கேவலமாக விமர்சித்தவர்.போர் நடந்தபோது அவர் முதலமைச்சராகவோ காங்கிரஸுடன் கூட்டணியாகவோ இருந்திருந்தால் விடுதலை புலிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருப்பார் என்பது நிச்சயம். இப்படி பட்டவருடன் கூட்டணி சேர்ந்து ஈழத் தமிழர்களுக்கு உதவப் போகிறீர்களா? கேட்டால் துரோகிகளைவிட எதிரிகள் மேல் என்று கூறுகிறீர்கள். கருணாவை விட ராஜபக்க்ஷே பரவாயில்லை என்று கை குலுக்குவீர்களா?

இப்போது வேறு வழியின்றி பேயுடன்(அதிமுக) கூட்டணி சேர்ந்திருக்கிறோம். அவர் காங்கிரஸ் பக்கம் போனால் பிசாசுடன்(திமுக) கூட்டணி சேர்கின்ற நிலை ஏற்ப்படலாம் என்று அறிவிக்கிறீர்கள்.மனிதர்களுடன் நீங்கள் எப்போது கூட்டு சேரப் போகிறீர்கள்? சோ ராமசாமி, சுப்ரமணிய சாமி போன்றவர்களுடன் ஒரே மேடையில் அமர்ந்து ஈழத்தை காப்பற்றப் போகிறீர்களா? கருணாநிதி, டாக்டர் ராமதாஸ்,வைகோ, திருமாவளவன் அடுத்து நீங்களா? முன்பே புண்பட்டு போயிருக்கும் ஒரு இனத்தை தொடர்ந்து ஏன் இப்படி எல்லோரும் ஏமாற்றுகிறீர்கள்?ஈழத்தின் மீது உண்மையில் அக்கரை இருக்குமானால், அக்கரை உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து, பெரியார் போல் அரசியல் சார்பில்லாத ஒரு இயக்கத்தை ஆரம்பித்து, தமிழ் நாட்டு மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். ஒரு சில எம் எல் ஏ சீட்டுகளைப் பெற்று நீங்கள் என்ன சாதிக்கப் போகிறீர்கள்? அரசியலில் நுழைந்துவிட்டால் எல்லாவற்றையும் அட்ஜஸ்ட் செய்ய வேண்டுமென்பது உங்களுக்குத் தெரியாதா? போதும் ஈழ மக்களைத் தொடர்ந்து ஏமாற்றுவதை நிறுத்துங்கள்!

செவ்வாய், 11 ஜனவரி, 2011

கமலஹாசனுக்கு என்ன ஆச்சு

மன்மதன் அம்பு படத்தினால் பல பேர் காயப்பட்டிருக்கிறர்கள். இந்து மத கடவுள்கள் கேவலப்படுத்தப் பட்டுள்ளதாக இந்து மக்கள் கட்சியினர் எதிப்பு தெரிவித்தனர். ஈழத்தமிழர்கள் இழிவுப் படுத்தப்பட்டுள்ளதாக வருத்தப்படுகிறார்கள்.தமிழை கேவலப்படுத்தியுள்ளதாக சிலர் கண்டனம் தெரிவிக்கிறார்கள். இளையராஜாவிற்க்குப் பிறகு அந்த இடத்திற்க்கு உரியவர் தேவி பிரசாத் மட்டுமே என்று கூறி ஏ. ஆர். ரஹ்மான் ரசிகர்களின் எதிர்ப்புகளையும் சம்பாதித்து கொண்டுள்ளார்.தற்போது விகடன் கேள்வி பதில் பகுதியில் " இந்துக்களின் அனுமதியுடன் தன் கவிதை நூல் வெளிவரும்" என்று கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.இவருடைய மன்மதன் அம்பு படத்தின் அந்தஆபாசக் கவிதையை இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த நூறு பேர் மட்டுமே எதிர்த்தார்கள்.மற்ற இந்துக்கள் கமலஹாசன் எப்பொழுதும் இதுமாதிரியான கிறுக்கு வேலைகளை பப்ளிசிட்டிக்காக செய்துகொண்டிருப்பார் என தெரிந்து அமைதியாகத்தான் இருந்தார்கள். ஆனால் என்னவோ ஒட்டு மொத்த இந்து சமுதாயத்தவரும் இவரை எதிர்த்த மாதிரி இந்து மக்கள் அனுமதியுடன் வெளியாகும் என்று கிண்டலடிக்கிறார். ஏன் கமலஹாசனுக்கு என்னவாயிற்று?

கமலஹாசனை தொடர்ந்து கவனித்து கொண்டிருப்பவர்களுக்கு ஒன்று நன்குப் புரியும். அவர் அவருக்கே தெரியாமல் சில உளவியல் பிரச்சனைகளில் சிக்கியிருக்கிறார். சின்ன வயதில் முறையான கல்விப் பயில இயலாமையினால் ஒரு தாழ்வு மனப்பான்மையிலேயே இவர் வளர்ந்திருக்கிறார். அதன் காரணமாகவே சுஜாதா , பலகுமாரன், வாலி போன்றவர்களுடன் பழக ஆரம்பித்த பின் தன்னை ஒரு இண்டலெக்ட்டாக காட்டிகொள்வதற்க்காக யாருக்கும் புரியாத மாதிரி பேச ஆரம்பித்தார். சினிமாவில் அதிகமாயிருக்கும் ஜால்ராக்கள் அதை ஊக்குவிக்க , தான் பெரிய இண்டலெக்ட்தான் என்று அவரே நம்ப ஆரம்பித்தார். முறையாகப் படிக்காவிட்டாலும் தனக்கு ஆங்கிலமும் பேச வரும் என்று காட்டிகொள்ள திரைப் படங்களுக்கு உள்ளேயும் வெளீயேயும் வாயை ஒரு மாதிரி கோணலாக வைத்துகொண்டு ஆங்கிலம் பேசினார்.தன்னை மற்றவர்கள் கவனிக்க வேண்டும் என்பதற்க்காக தன் படங்களில் முத்த காட்சிகளை வேண்டுமென்றே திணித்தார். திராவிட இயக்கங்களின் ஆளுமையில் இருந்த தமிழ் திரைஉலகில் தான் ஒரு பார்ப்பனர் என்று காட்டிகொள்வதில் அவருக்கு ஒரு காம்ப்லெக்ஸ் ஏற்படவே தான் பெரியாரின் கொள்கைகளினால் ஈர்க்கப்பட்டதாக கூறி நாத்திகராக தன்னை அறிவித்துக் கொண்டார்.ஆனால் சத்தியராஜை ஏற்றுக் கொண்டமாதிரி இவரை ஏற்றுக் கொள்ள வீரமணி & கோ முன்வரவில்லை.ஏன் என்றால் அவர்களுக்கு ஒரு பார்ப்பனர் திடிரென்று இப்படி மாறுவது நம்பிகைக்கு உரியதல்ல என நினைத்தார்கள். இருந்தாலும் கலைஞருடன் நட்பை வளர்த்துகொண்டு அவ்ருடைய வழியில் பதுகாப்பான நாத்திகர் ஆனார். கலைஞரின் நாத்திகம் என்பது இந்து மதத்தை மட்டும் எதிர்ப்பது. மற்ற மதத்தை எதிர்த்தால் பிரச்சனையாகிவிடும். ஓட்டு விழாது. இந்து மதத்தைப் பொருத்தவரை சில ஜாதிகளை சரி செய்துகொண்டால் போதும் என்பதுதான் கலைஞரின் வழி.அதை அப்படியே பின்பற்றி தன்னுடைய அத்தனை படங்களிலும் இந்து மதத்தவர்களை கேவலமாக சித்தரிக்க ஆரம்பித்தார்.

கடவுள் இல்லை என்று சொல்வதன் மூலம் தன்னை ஒரு பெரியாராகவும், Betrand Russel ஆகவும் Bernard Shaw ஆகவும் நினைத்து கொள்கிறார்.. ஆனால் அவர்கள் எல்லாம் உண்மையான நாத்திகர்கள். எந்த மதத்து கடவுள்களையும் ஏற்காதவர்கள். இவர்களைப் போல ஒரு மதத்திற்க்கான எதிர்ப்பாளர்கள் இல்லை.

அடுத்து, கமலஹாசன், தான் மற்றவர்களை விட ஒரு படி உயர்ந்தவர் என்ற மன பிறழ்வுக்கு ஆளாகியிருக்கிறார். உலக அளவில் எதையும் சாதிக்காத அவருக்கு உலக நாயகன் பட்டம் எல்லாம் கொடுத்து அவரை இந்த நிலைக்கு ஆட்படுத்திவிட்டர்கள்.அதனால் இந்திய சினிமாவில் தன்னை விட பெரிய ஆட்கள் யாருமில்லை என்று அவர் நம்புகிறார். அதனால் தான் வேறு யாராவது பாரட்டப்பட்டால் அவரால் ஜீரணிக்க முடியவில்லை. ஆஸ்கர் அவார்ட் தனக்குதான் முதலில் கிடைக்கும் என்று ஒரு குருட்டு நம்பிக்கையில் இருந்தவருக்கு, தனக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை என்று தெரிந்ததும் அதிர்ச்சியடைந்தார்.

ஆஸ்கர் அவார்ட் ஏ. ஆர். ரஹ்மானுக்கு கிடைத்ததை அவரால் ஏற்றுக் கொள்ள் முடியவில்லை. ஏதாவது ஒரு வகையில் அவரை கேவலப் படுத்த எண்ணித்தான் தேவி பிரசாத்தைப் பாராட்டியிருக்கிறார்.

கமலஹாசன் ஒரே நேரத்தில் superiority complex, inferiority complex இரண்டாலும் அவஸ்தைப் பட்டு கொண்டிருக்கிறார். கமலஹாசன் தற்பொழுது செய்து வரும் இத்தகையான காரியங்களை, அவரது உளவியல் பிரச்சனைகளின் காரணமாகத்தான் செய்து வருகிறார் என்பதை நன்கு உணர முடிகிறது.