திங்கள், 31 ஜூலை, 2017

கருவேல மரங்களும் திருத்தப் பட்டத் தீர்ப்பும்





மதுரை உயர் நீதி மன்றம்,  நிலத்தடி நீரை பாதிப்பதால் சீமை கருவேல மரங்களை முற்றிலுமாய் அகற்ற வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்பு ஒரு தீர்ப்பு வழங்கியது. அப்பொழுது " சீமை கருவேல மரங்களும் யதார்த்தமில்லாதத் தீர்ப்பும்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எனது வலை பக்கத்தில் எழுதி அதனை முக நூலிலும் பகிர்ந்திருந்தேன்.

அந்தக் கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன். " அந்த கால மன்னர்கள் அரண்மனையில் இருந்து கொண்டு அமைச்சர்களை விசாரிப்பார்களாம் மாதம் மும்மாரி பொழிகிறதா என்று. அதைப் போலவே எதார்த்ததை அறியாமல் இந்தத் தீர்ப்பும் அதன் தொடர் நடவடிக்கைகளும் அமைந்துள்ளன. இந்தத் தீர்ப்பு குறித்து பாமரராகிய நமக்கு பல ஐயங்கள் எழுகின்றது.

ஏறத் தாழ  40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகம் முழுவதும் இந்த மரங்கள் பரவி கிடக்கின்றன. இவ்வளவு காலங்கள் இல்லாமல் இம் மரங்களினால்தான் நிலத்தடி நீர் குறைந்து வருவதாக எப்படி கண்டறியப்பட்டது. ஏதேனும் அறிவியல் ஆய்வு நடத்தப்பட்டதா?  ஒரு ஏக்கரில் இந்த மரங்கள் இருந்தால் அந்தப்பகுதியில் நீர் வளம் எத்தனை ஆண்டுகளில்பாதிக்கப்படும் என புள்ளி விபரங்கள் எடுக்கப்பட்டதா?

ஒரு மாத கால அவகாசத்தில் தமிழகத்தில் உள்ள அத்தனை சீமை கருவேல மரங்களை அகற்றுவது சாத்தியம்தானா? புறம்போக்கில் உள்ள மரங்களை அகற்றவே ஒரு வருடத்திற்கு மேலாகாதா?"

இதற்கிடையே கருவேல மரங்கள் வெட்டப்படுவதால் மாநிலத்தின் சில பகுதிகளில் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படைவதால் இவ்வாறு வெட்டுவதற்குத் தடை கோரி ஒருவர் உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சீமை கருவேல மரங்களினால் நிலத்தடினீர் ஆதாரம் பாதிப்படைகிறதா என கண்டறிய உயர் வனத்துறை அலுவலரின்(வனத்துறை முதன்மை பாதுகாவலர்) தலைமையின் கீழ் ஒரு குழுவை நியமித்தது. அந்தக் குழு  கடந்த 29.07.17 அன்று தனது விசாரணை அறிக்கையினை நீதி மன்றத்தில் சமர்ப்பித்தது.

நிபுணர் குழுவின் பரிந்துரை. 

(நீர் நிலைகளில் உள்ள கருவேல மர்ங்களை மட்டு மல்ல எந்த மரங்களாயிருந்தாலும் வெட்டப்பட வேண்டும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே)

இப்பரிந்துரையின்   அடிப்படையில் நீதி மன்றம் இவ்வாறானத் தீர்ப்பை வழங்கியுள்ளது.




உரிய ஆய்வு செய்யப்படாமல் கருவேல மரங்களை வெட்டுவது ஏன் என் நான் கேள்வி எழுப்பியபோது, எனது வலை பக்கத்தில் கடுமையான கண்டன்ங்கள் வந்தது. ஏதோ கருவேல மரங்களினால்தான் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் வந்துவிட்டதுபோல் அதை வெட்டியே தீர வேண்டும் என பலரும் தெரிவித்தனர். இன்று உயர் நீதி மன்றம் ஒரு சரியானத் தீர்வை வழங்கியிருக்கிறது.



நம்முடைய தமிழகத்தில் அரசியவாதிகளாயிருந்தாலும், அதிகாரிகளாய் இருந்தாலும் , நீதி மன்றங்களாய் இருந்தாலும், பொது மக்களாயிருந்தாலும் எல்லோரும் வெறும் உணர்ச்சிகளின் அடிப்படையிலேயே முடிவுகளை எடுக்கிறார்கள். அறிவுப் பூர்வமான அறிவியல் பூர்வமான முடிவுகள் எடுக்கப்படும்பொழுது மட்டுமே நாடு முன்னேறும்!